பக்கம் எண் :

பக்கம் எண்:701

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
         
    70    கொள்கென வருளிக் குறைபா டின்றி
          நாணா டோறு மானா வுவகையொடு
          காட்சி பெருமுத லாகக் கவினிய
          மாட்சி நீரின் மாண்சினை பல்கிய
          வேட்கை யென்னும் விழுத்தகு பெருமரம்
    75    புணர்ச்சிப் பல்பூ விணர்த்தொகை யீன்று
          நோயி லின்பக் காய்பல தூங்கி
          யாழ வற்புக்கனி யூழறிந் தேந்த
          ஓவாது நுகர்ந்து தாவாச் செல்வமொ
          டொழிவின் மாநக ரறக்கடந் தாங்கி
    80    ஒழுகுப மாதோ வொருங்குநன் கியைந்தென
 
                   (இதுவுமது)
            70 - 80 : குறை............இயைந்தென்
 
(பொழிப்புரை) குறைபாடு சிறிதுமின்றி நாள்தோறும் அமையாத மகிழ்ச்சியோடே காட்சி என்னும் அடிப் பகுதியினையும் அழகிய பண்புகளாகிய மாட்சிமையுடைய மிக்க கிளைகளையும் கொண்டு அழகுற்ற வேட்கை என்னும் சிறப்புடையதொரு பெரிய மரம் புணர்ச்சி என்னும் பல பூக்களையுடைய கொத்துக்களை ஈன்று துன்பமில்லாத இன்பமாகிய பல காய்களைக் காய்த்துத் தூங்கவிட்டு அன்பாகிய கனிகளை முறையறிந்து ஏந்தி நிற்றலாலே அக்கனிகளை உதயணனும் தேவிமாரும் கூடி இடையீடின்றி நுகர்ந்து கெடாத செல்வப் பெருக்கத்தோடு அழிதலில்லாத பெரிய நகரமாகிய கோசம்பியின்கண் தத்தமக்குரிய அறக்கடமைகளை மனம் பொருந்தி மேற்கொண்டு ஒழுகாநின்றனர் என்க.
 
(விளக்கம்) காட்சி - ஊழினால் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் ஓரிடத்தே தலைப்பட்டு ஒருவரையொருவர் காண்டல். இன்ப வாழ்க்கைக்கு இக்காட்சியே முதலாகலின் அதனை அடிமரமாக உருவகித்தார். இதனை,

   'ஒன்றே வேறே யென்றிரு பால்வயி
   னொன்றி யுயர்ந்த பால தாணையி
   னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
   மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே' (தொல். கள. சூ,. 2).


எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க. காட்சி - பெருமுதலாக என்றமையால் ஏனைய அகத்துறைகள் ஆகிய மாண் சினைபல்கிய மரம் என்க. வேட்கை என்னும் மரம். புணர்ச்சி இன்பத்திற்குக் காரணமாகலின் அதனைப் பூ என்றார். இன்பம் - காய் என்க. இம்மரத்தின் பயன் அன்பு ஆகலின் அற்புக் கனி ஏந்த என்றார். இப்பகுதியோடு,

   'ஏகம் முதற்கல்வி முளைத்தெழுந் தெண்ணில் கேள்வி
   ஆகம் முதற்றிண் பணைபோக்கி யருந்த வத்தின்
   சாகந் தழைத்தன் பரும்பித்த ருமம்ம லர்ந்து
   போகங் கனியொன்று பழுத்தது போலு மன்றே'
 (கம்ப. நகர. 75)

என்ற கம்பநாடர் வாக்கினையும் காண்க.

                  9. விருத்தி வகுத்தது முற்றிற்று.