பக்கம் எண் :

பக்கம் எண்:704

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         வல்லே வருக வென்றலின் மல்கிய
         மண்ணியன் மன்னர்க்குக் கண்ணெண வகுத்த
         நீதி நன்னூ லோதிய நாவினள்
    15    கற்றுநன் கடங்கிச் செற்றமு மார்வமும்
         முற்ற நீங்கித் தத்துவ வகையினும்
         கண்ணினு முள்ளே..............
         குறிப்பி னெச்ச நெறிப்பட நாடித்
         தேன்றோய்த் தன்ன கிளவியிற் றெளிபடத்
    20    தான்றெரிந் துணருந் தன்மை யறிவினள்
 
          (பதுமை என்னும் தூதியின் இயல்பு)
           12 - 20 : மல்கிய................அறிவினள்
 
(பொழிப்புரை) மன்னவன் அருள் பெற்றபின் வளம் பெருகிய நில உலகத்தை ஆளும் இயல்புடைய அரசர்களுக்குக் கண்கள் என்று சான்றோர்களால் வகுத்து வைக்கப்பட்ட நல்ல நீதி நூல்களை ஓதிமுதிர்ந்த செந்நாவினையுடையவளும் அங்ஙனம் ஓதிய நூல் வகுத்த நெறியில் நின்று பொறிபுலன்கள் நன்கு அடங்கப் பெற்று வெறுப்பும் விருப்பமும் முழுமுற்றும் நீங்கப் பெற்றுத் தத்துவ முறையாலும் கண்களாலும் அரசர்கள் நெஞ்சத்துள்ளே .............குறிப்பினாலும் அவர் கூறாது விட்ட செய்திகளையும் முறைப்பட ஆராய்ந்து அறிந்து உணரும் தன்மையுடைய அறிவினையுடையவளும் நூல்களிடத்தே அமைந்த தேனில் தோய்த்தாற்போன்ற சொற்களின் பொருளைத் தானே தெளிவுண்டாக ஆராய்ந்து உணரும் தன்மையுடைய நுட்ப அறிவினையுடையவளும்; என்க.
 
(விளக்கம்) மல்கிய - வளம் மல்கிய என்க. எண்ணினை ஆளும் இயல்புடைய மன்னர்க்கு என்க. நீதி நூல் மன்னர்க்குக் கண்ணென வகுத்துள்ளமையை, 'ஒற்று முரைசான்ற நூலு மிவை இரண்டுந், தெற்றென்க மன்னவன் கண்' எனவரும் திருக்குறளைக் காண்க (581). 'காதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப்பட்ட நீதி' என்பது சிந்தாமணி (233). தத்துவவகை - மனம் முதலிய அகக் கருவிகளின் தன்மையாலும் என்க. 17 ஆம் அடியின் இறுதியிலுள்ள இரண்டுசீர்கள் அழிந்தன. எச்சம் - கூறாதுவிட்ட செய்தி, நெறிப்பட நாடித் தெரிந்துணருந்தன்மை அறிவினள் என முன்னுங் கூட்டுக : தேன் றோய்த்தன்ன கிளவி என்றது நூல்களிடத்தமைந்த மொழிகளை. எனவே, 'மதி நுட்பம் நூலோடு' டையாள் என்றாராயிற்று.