பக்கம் எண் :

பக்கம் எண்:705

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         உறுப்புப்பல வறுப்பினு முயிர்முத றிருக்கினும்
         நிறுத்துப்பல வூசி நெருங்க வூன்றினும்
         கறுத்துப்பல கடிய காட்டினுங் காட்டாது
         சிறப்புப்பல செயினுந் திரிந்துபிறி துரையாள்
    25   பிறைப்பூ ணகலத்துப் பெருமக னவன்மாட்டுக்
         குறித்தது கூறுதல் செல்லாக் கொள்கையள்
 
                   (இதுவுமது)
           21 - 26 : உறுப்பு...............கொள்கையள்
 
(பொழிப்புரை) வேற்று மன்னர் தன் உடல் உறுப்புக்கள் பலவற்றையும் அரியுமிடத்தும் அன்றி உயிர்க்கு முதலாகிய தலையைத் திருகிக் கொல்லுமிடத்தும் அன்றித் தன்னை நிறுத்தி உடலின்மேல் ஊசிகள் பலவற்றை நெருங்கக் குத்திய விடத்தும் அன்றிச், சினந்து பற்பல கொடுஞ்சொற்களைக் கூறி அச்சுறுத்திக் காட்டுமிடத்தும் தன் னெஞ்சிலுள்ள மறைச்செய்தியைக் கூறாதவளும் அன்றித் தான் பெரிதும் மகிழும்படி தனக்கு அவர் பலவேறு சிறப்புக்களைச் செய்யுமிடத்தும் அவற்றால் மனம் பிறழ்ந்து தன் கொள்கைக்கு மாறாய தொன்றனைக் கூறாதவளும் பிறைவடிவாகிய அணிகலனை உடைய தன் அரசன்பால் தான், நெஞ்சில் பதித்துள்ள குறைச் செய்தியைக் கூறாத திட்பமான கொள்கையுடையவளும்; என்க.
 
(விளக்கம்) உறுப்பு - கை கால் முதலியன. தலையைத் திருகுமிடத்து உயிர் போதலின் அதனை உயிர்முதல் என்றார். திருக்குதல் -  திருகுதல். நிறுத்து - தன்னை நிறுத்தி. கறுத்து - சினந்து. மறைச் செய்தியைக் காட்டாது என்க. திட்பத்தில் திரிந்து என்க. பெருமகன் என்றது தன்னரசனை. தன் அரசன்பாற் கண்டு நெஞ்சிற் குறித்து வைத்ததனைக் கூறாதவள் என்க. கூறுதல் செல்லா - கூறாத. இஃதென் சொல்லிய வாறோ எனின்? 'வெங்கண் வேந்தர் தங்கட்குற்றது அங்கண் ஞாலத்தாரே யாயினும் அகலிடத்துரைக்கின் அற்றம் பயத்தலின் அவரின் வாழ்வோர் அவர்முன் நின்று அவர் இயல்புஇல் நீர்மை இற்றென உரைப்பின் விம்மமுறுதல்' என்பது பற்றிக் கூறியவாறு. இதனால் அவளடக்க முடைமை சிறப்பிக்கப்பட்டது.