பக்கம் எண் :

பக்கம் எண்:706

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          இன்னது செய்கென வேவ லின்றியும்
          மன்னிய கோமான் மனத்ததை யுணர்ந்து
          முன்னியது முடிக்கு முயற்சிய ளொன்னார்
    30    சிறந்தன பின்னுஞ் செயினு மறியினும்
          புறஞ்சொ றூற்றாது புகழுந் தன்மையள்
          புல்லோர் வாய்மொழி யொரீஇ நல்லோர்
          துணிந்த நூற்பொருள் செவியுளங் கெழீஇப்
          பணிந்த தீஞ்சொற் பதுமை யென்னும்
    35    கட்டுரை மகளொடு கரும நுனித்து
 
                   (இதுவுமது)
           27 - 35 : இன்னது................மகளொடு
 
(பொழிப்புரை) தன்னரசன் நீ இன்ன காரியத்தைச் செய்க என்று வெளிப்படக் கூறி ஏவிய காரிய மன்றியும், நிலைபெற்ற அவ்வரசன் மனத்தின்கண் கருதிய காரியங்களையும் குறிப்பினாலுணர்ந்து அவன் ஏவாமலே தானே முற்பட்டுச் செய்து முடிக்கும் அரிய முயற்சியை யுடையவளும், பகை மன்னர் தனக்குச் சிறந்த நன்மைகளைச் செய்யினும் அல்லது செய்வதாகச் சொல்லிப் பின்னர் முகமாறியவிடத்தும் பிறர்பால் அவர் பழிச்சொல்லை எடுத்துக் கூறாது புகழ்ந்தே பேசும் நற்பண்புடையவளும், கல்லாப்புல்லோர் வறிய வாய்மொழியைக் கேளாது விட்டுச் சான்றோர் துணிந்து கூறிய நூற்பொருளைச் செவிவாயாக நெஞ்சிற் கொண்டு யாவர் மாட்டும் தன் பணிவுடைமையைக் காட்டும் இனிய சொற்களையுடையவளும், பதுமை என்னும் பெயரையுடையவளும் பொருள் பொதிந்த மொழி பேசுதலையுடையவளும் ஆகிய தூதியோடு; என்க.
 
(விளக்கம்) ஏவல் - ஏவிய காரியம். மன்னிய - நிலைபெற்ற. மனத்ததை - மனத்தின்கட் கருதிய காரியத்தை. முன்னி - முற்பட்டு. ஒன்னார் பகைவர். சிறந்தன செயினும் பின்னும் மறியினும் என மாறுக. பின்னும் என்புழி உம்மை அசைநிலை. மறியினும் - மாறுபடினும். புல்லோர் - கல்லாக் கயவர். பணிந்த சொல் - பணிவுடைமையைப் புலப்படுத்துஞ் சொல். கட்டுரை - பொருள் பொதிந்த சொல்.