பக்கம் எண் :

பக்கம் எண்:708

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         
    40    கைபுனைந் தோருங் கண்டு காணார்
          ஐயைந் திரட்டி யவன வையமும்
          ஒள்ளிழைத் தோழிய ரோரா யிரவரும்
          சேயிழை யாடிய சிற்றிற் கலங்களும்
          பாசிழை யல்குற் றாய ரெல்லாம்
    45    தம்பொறி யொற்றிய தச்சுவினைக் கூட்டத்துச்
          செம்பொ னணிகலஞ் செய்த செப்பும்
 
        (வாசவதத்தைக்குப் பிரச்சோதனன்
                   அளித்த பொருள்கள்)
         40 - 46 : கை..................செப்பும்
 
(பொழிப்புரை) இயற்றிய கம்மியர் தாமும் நோக்கி எளிதில் அறிந்து கொள்ளாராம்படி நுணுகிய தொழிற்றிறம் அமைந்த ஐம்பது யவனத்தேர்களும் ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயிரந் தோழிமாரும் வாசவதத்தை பேதைப் பருவத்தே சிற்றில் இழைத்தும் சிறுசோ றட்டும் விளையாடிய கலங்களும் அவ்வாசவதத்தையின் பசிய அணிகலனணிந்த அல்குலையுடைய தாய்மார்கள் தத்தம் இலச்சினையிடப்பட்ட தச்சர் தொழிலால் இயற்றப்பட்ட விளையாட்டுப் பொருள்களும் செம்பொன்னாலியன்ற அணிகலன்கள் இட்டுவைத்தற்குச் செய்த செப்பும் என்க.
 
(விளக்கம்) கைபுனைந்தோர் - செய்தோர். ஐயைந்திரட்டி - ஐம்பது. யவனவையம் - யவன நாட்டுத் தச்சர் செய்த தேர். சேயிழை : வாசவதத்தை. சிற்றில் - மணலால் இயற்றும் விளையாட்டு வீடு. அடிசில் கலங்களும் என்க. தாயர் - பதினாறாயிரவர். ஆகலின் தாயர் எனப் பன்மை கூறினர். தச்சுவினைக் கூட்டம் - தச்சர் தொழிலாலாய சிறுதேர் முதலிய விளையாட்டுப் பொருட்குவியல் என்க. அணிகலம் இட்டுவைத்தற்குச் செய்த செப்பும் என்க.