பக்கம் எண் :

பக்கம் எண்:709

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          தாயுந் தோழியுந் தவ்வையு மூட்டுதல்
          மேயல ளாகி மேதகு வள்ளத்துச்
          சுரைபொழி தீம்பா னுரைதெளித் தாற்றித்
    50    தன்கை சிவப்பப் பற்றித் தாங்காது
          மகப்பா ராட்டுந் தாயரின் மருட்டி
          முகைப்புரை மெல்விரல் பானய மெய்த
          ஒளியுகிர் கொண்டு வளைவா யுறீஇச்
          சிறகர் விரித்து மெல்லென நீவிப்
    55    பறவை கொளீஇப் பல்லூழ் நடாஅய்த்
          தன்வாய் மழலை கற்பித் ததன்வாய்ப்
          பரத கீதம் பாடுவித் தெடுத்த
          மேதகு கிளியு மென்னடை யன்னமும்
 
                   (இதுவுமது)
            47 - 58 : தாயும்............அன்னமும்
 
(பொழிப்புரை) தன் தாயாதல் தோழிமாராதல் தவ்வையராதல் ஊட்டுதலை விரும்பாளாய் மேன்மையுடைய பொற் கிண்ணத்தின்கண் நல்லாவின் மடிசுரந்து பொழிந்த இனிய பாலை நுரை தெளியுமாறு ஆற்றித் தன் கைசிவக்கும்படி பற்றிக் கொண்டு காலந் தாழ்த்தலின்றி மகவினைப் பாராட்டும் தாயர் போன்று பாராட்டி மருட்டிக் காந்தள் முகையினையொத்த தன் மெல்லிய விரல்கள் பாலினது நிறத்தையுடைய தனது ஒளியுடைய நகத்தால் வளைந்த அலகின்கண் பாலை ஊட்டிப் பின்னர் அதன் சிறகினைத் தன் கையால் விரித்து மெல்லத்தடவிப் பறக்க விடுத்துப் பன்முறையும் நடக்க விடுத்துத் தன் வாய் மழலைச் சொற்களைக் கற்பித்து அதன் வாயினாலே பரதகீதம் பாடுவித்து வளர்த் தெடுத்த மேன்மையுடைய கிளியும் மெல்லிய நடையினையுடைய அன்னமும்; என்க.
 
(விளக்கம்) இப்பகுதியின்கண் வாசவதத்தை கிளிவளர்த்த முறை மிக அழகாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. தாய் - செவிலி. தவ்வை -  செவிலியின் மகளாய்த் தனக்கு மூத்தவள். கிளிக்குத் தாய் முதலியோர் பாலூட்டுதலை விரும்பாளாய்த் தானே இவ்வாறு ஊட்டுவாள் என்பது கருத்து. மேயலள் - விரும்பாதவள். மேதகு வள்ளம் என்றதனால் பொற்கிண்ணம் என்க. சுரை - முலைக்காம்பு. பாலை ஆற்றிக் கிளியைப் பற்றி என்க. தாங்காது - காலந் தாழ்த்தாமல். மக - மகவு. முகை - காந்தள் முகை. பால் நயம் - பாலின் நிறம். வளைவாய் - வளைந்த அலகு. உறீஇ - புகட்டி. பறவை கொளீஇ - பறக்கவிட்டு. நடாஅய் - நடத்தி. அதன் வாய் - அக் கிளியின் வாயினின்றும், பரத கீதம் - கூத்திற்கியன்ற இசை.