பக்கம் எண் :

பக்கம் எண்:710

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          அடுதிரை முந்நீர் யவனத் தரசன்
    60    விடுநடைப் புரவியும் விசும்பிவர்ந் தூரும்
          கேடில் விமானமு நீரியங்கு புரவியும்
          கோடி வயிரமுங் கொடுப்புழிக் கொள்ளான்
          சேடிள வனமுலைத் தன்மக ளாடும்
          பாவை யணிதிறை தருகெனக் கொண்டுதன்
    65    பட்டத் தேவிப் பெயர்நனி போக்கி
          எட்டி னிரட்டி யாயிர மகளிரும்
          அணங்கி விழையவு மருளான் மற்றென்
          வணங்கிறைப் பணைத்தோள் வாசவ தத்தைக்
          கொருமக ளாகெனப் பெருமகன் பணித்த
    70    பாவையு மற்றதன் கோயிலுஞ் சுமக்கும்
          கூனுங் குறளு மேனாங் கூறிய
 
                  (இதுவுமது)
           59 - 71 : அடுதிரை............குறளும்
 
(பொழிப்புரை) மோதுகின்ற அலைகளையுடைய கடலிடையே அமைந்த யவன நாட்டரசன் ஒரு காலத்தே பிரச்சோதன மன்னனுக்குத் திறைப்பொருளாக விரைந்த நடையினையுடைய குதிரைகளும், வானிற் பறந்து செல்லும் கேடில்லாத விமானமும் நீரினும் நீந்திச் செல்லும் குதிரைகளும் ஒரு கோடி வயிரமணிகளும் கொடுத்தானாக: அம் மன்னன் அவற்றைக் கொள்ளானாய் அழகிய இளமையுடைய பெரிய முலையினையுடைய மகளாகிய அந்த யவன மன்னன் மகள் விளையாடாநின்ற அழகிய பாவையைத் திறைப் பொருளாகத் தருக என்று அதனைக் கொண்டு அப் பாவைக்குத் தன் பட்டத்தேவியின் பெயரையிட்டு அதனைத் தன்னுடைய பதினாறாயிரம் புதல்வியரும் வருந்தி விரும்பித் தன்னைக் கேட்கவும் கொடானாய், இஃது என்னுடைய வளைந்த முன் கையினையும் பருத்த தோள்களையும் உடைய வாசவதத்தைக்கு விளையாட்டுக் குழந்தை யாகுக என்று கூறி அவ்வரசன் வழங்கிய அந்த யவனப் பாவையும், அதற்குரிய சிற்றிலும் இவற்றைச் சுமந்து வருகின்ற கூனரும் குறளரும்; என்க.
 
(விளக்கம்) விடுநடை : வினைத்தொகை. விசும்பிவர்ந்தூரும் விமானம் - வானவூர்தி. வயிரம் - ஒரு மணி. சேடு - பெருமை. தன் மகள் : யவனத்தரசன் மகள். அணிபாவை என மாறுக. பட்டத்தேவி என்றது வாசவதத்தையின் தாயை. எட்டினிரட்டியாயிரம் - பதினாறாயிரம். அணங்கி - வருந்தி. ஒருமகள் - விளையாட்டுப்பாவையை மகவாகக் கொள்ளுதல் இயல்பு. இறை - முன்கை. பணை - மூங்கிலுமாம். கோயில் - மாளிகை வடிவில் செய்த பாவை வைக்கும் பேழை. கூன் - கூனர். குறள் - குறளர்.