பக்கம் எண் :

பக்கம் எண்:711

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          கூனுங் குறளு மேனாங் கூறிய
          நருமதை முதலா நாடக மகளிரும்
          ஆன்வீற் றிருந்த வரும்பெற லணிகலம்
          தான்வீற் றிருத்தற்குத் தக்கன விவையென
    75    முடியுங் கடகமு முத்தணி யாரமும்
          தொடியும் பிறவுந் தொக்கவை நிறைந்த
          முடிவாய்ப் பேழையு முரசுங் கட்டிலும்
          தவிசுங் கவரியுந் தன்கை வாளும்
          குடையுந் தேரு மிடையற வில்லா
    80    இருங்களி யானை யினமும் புரவியும்
          வேறுவே றாகக் கூறுகூ றமைத்துக்
          காவ லோம்பிக் காட்டினிர் கொடுமினென்
          றாணை வைத்த வன்னோர் பிறரும்
          நெருங்கிமேற் செற்றி யொருங்குவந் திறுப்பப்
 
          (உதயணனுக்கு வழங்கிய பொருள்கள்)
              71 - 84 : மேல்...........இருப்ப
 
(பொழிப்புரை) உதயணனுக்கு வழங்கும் பொருட்டுப் பிரச்சோதன மன்னன் தனது கருவூலத்தின்கண் நெடிது வைத்துப் போற்றப்பட்ட பெறுதற்கரிய பேரணிகலன்களும் முன்னர் எம்மால் கூறப்பட்ட நருமதை முதலிய ஆடல்மகளிரும் அவ்வுதயணன் அரசு வீற்றிருக்குங்கால் அணிந்து கோடற்குத் தகுந்தன இவை என்று கருதப்பட்ட முடிக்கலனும் கடகமும் முத்தாலியன்ற அழகிய மாலையும் தொடியும் இன்னோரன்ன பிறவும் தொகுத்து வைக்கப்பட்டு நிறைந்த மூடியாகிய வாயையுடைய பேழையும், முரசும் கட்டிலும் இருக்கைகளும் சாமரைகளும் தன்னுடைய கைவாளும் குடையும் தேரும் இடையீடின்றிச் செறிந்த பெரிய மதமிக்க யானைத் திரளும் குதிரைத் திரளும் ஆகிய இப்பொருள்களைத் தனித் தனியே கூறு கூறாக அமைத்து இவற்றையெல்லாம் பாதுகாத்துப் பேணிக் கொண்டு சென்று உதயண மன்னனுக்குக் காட்டி வழங்குமின்! என்று கட்டளையிடப்பட்ட மறவர்களும், பிறரும் நெருங்கி ஒருங்கே திரண்டு வந்து தங்காநிற்ப; என்க.
 
(விளக்கம்) நருமதை - முன்னர் உஞ்சைக்காண்டத்தே கூறப்பட்டவள் ஆகலின் மேல் நாங் கூறிய என்றார். ஆன் - அவ்விடம். வீற்றிருந்த - பேணப்பட்டு நெடிது இருந்த என்க. ஆன் என்றது பிரச்சோதனன் கருவூலத்தை. தான் : உதயணன். அரசு வீற்றிருக்குங்கால் அணிந்து கோடற்குத் தகுந்தன இவை என்று கருதி என்க. முடி - மூடி : உச்சியுமாம். கட்டில் - அரியணை. தவிசு - இருக்கைகள். ஆணை - கட்டளை. ஒருவர்மேல் ஒருவர் செற்றி என்க. செற்றுதல் -  இடித்தல். இறுப்ப - தங்க.