பக்கம் எண் :

பக்கம் எண்:713

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          தொடித்தோள் வேந்தன்முன் றுட்கென் றிறைஞ்சினள்
    90    வடிக்கே ழுண்கண் வயங்கிழை குறுகி
          முகிழ்விரல் கூப்பி யிகழ்வில ளிறைஞ்சி
          உட்குறு முவண முச்சியிற் சுமந்த
          சக்கர வட்டமொடு சங்குபல பொறித்த
          தோட்டுவினை வட்டித்துக் கூட்டரக் குருக்கி
    95    ஏட்டுவினைக் கணக்க னீடறிந் தொற்றிய
          முடக்கமை யோலை மடத்தகை நீட்டி
 
        (பதுமை ஓலையை உதயணனிடம் வழங்குதல்)
                89 - 96 : தொடி...........நீட்டி
 
(பொழிப்புரை) தொடியணிந்த உதயணன் திருமுன் சென்ற பதுமை அவன் தோற்றத்தால் மருண்டு தன் கைகள் தாமே குவியாநிற்பத் தன் வயமின்றியே அவனை வணங்கியவளாய் மாவடுப்பிளவு போன்றனவும் நிறமிக்கனவும் காண்போர் உள்ளத்தை உண்பனவும் ஆகிய கண்களையும் விளங்கிய அணிகலனையுமுடைய அப்பதுமை அவ்வேந்தனை அணுகிச் சென்று மீண்டும் கைகூப்பி வணங்கி வழிபாட்டின்கண் குறையிலளாய் மீண்டும் வணங்கி அஞ்சுதற்குரிய கருட உருவினை உச்சியிலே சுமந்த சக்கர வட்டத்தோடு பற்பல சங்கு வடிவங்களும் பொறிக்கப்பட்ட ஓலைத் தொழிற்றிறம் அமைந்ததும் சுருட்டி மணப்பொருள் கூட்டிய அரக்கினை உருக்கி ஏடெழுதும் தொழிலாளர் இடுமிடமறிந்து ஒற்றிய இலச்சினையோடு சுருளமைந்ததும் ஆகிய திருவோலையினை மடப்பமுடைய அத்தூதி அம்மன்னனுக்கு அளியா நிற்ப; என்க.
 
(விளக்கம்) வேந்தன் : உதயணன். காண்டலும் கைகள் தாமே குவிதலின் துட்கென்று இறைஞ்சினள் என்றார். துட்கென்று - துணுக்கென்று. வடி - மாவடுப்பிளவு. உண்கண் - காண்போர் மனத்தை உண்ணுங் கண் என்க. வயங்கிழை : பதுமை. முகிழ்விரல் - கை. வழிபாட்டு முறையை இகழ்விலளாய் என்க. உட்கு - அச்சம். உவணம் - கருடன். சக்கரவட்டம் - சக்கரமாகிய வட்ட வடிவம். சங்கு வடிவம் என்க. வட்டித்து - சுற்றி. மணங்கூட்டிய அரக் கென்க. கணக்கன் - எழுத்தாளன். ஈடு - இடுதல். முடக்கு - சுருள். ஓலை : பிரச்சோதனன் திருவோலை. மடத்தகை : பதுமை. நீட்டி - நீட்ட.