பக்கம் எண் :

பக்கம் எண்:715

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          சினைக்கெடிற் றன்ன செங்கேழ்ச் செறிவிரல்
          தனிக்கவின் கொண்ட தகைய வாக
          அருமறை தாங்கிய வந்த ணாளரொடு
          பொருணிறை செந்நாப் புலவ ருளப்பட
    105    ஏனோர் பிறர்க்கு நாணா டோறும்
          கலனிறை பொழியக் கவியி னல்லதை
          இலமென மலரா வெழுத்துடை யங்கையின்
          ஏற்றனன் கொண்டு வேற்றுமை யின்றிக்
          கோட்டிய முடிய னேட்டுப்பொறி நீக்கி
    110    மெல்லென விரித்து வல்லிதி னோக்கிப்
 
                   (இதுவுமது)
              101 - 110 : சினை.........நோக்கி
 
(பொழிப்புரை) கருக்கொண்டுள்ள கெளிற்றுமீனையொத்த செந்நிறமுடைய செறிந்த விரல்கள் ஒப்பற்ற அழகு கொண்ட தன்மையுடையனவாக உணர்தற்கரிய மறைகளை உணர்ந்த அந்தணரோடு உறுதிப் பொருளை ஓதி நிறைதற்குக் காரணமான செந்நாவினையுடைய புலவர்க்கும் ஏனையோர்க்கும் நாள்தோறும் அணிகலன் முதலிய பொருள்களை நிரம்ப வழங்குதற்குக் கவிதலல்லது ஏற்போர்க்கு யாம் கொடேம் என்று குறித்தற்கு விரிதலில்லாத நல்லிலக்கணக் கோடுகளமைந்த தனது அழகிய கையின்கண் ஏற்றுக்கொண்டு மனத்தின்கண் வேற்றுமை சிறிதுமின்றி முடிதாழ்ந்து அவ்வோலையின் இலச்சினையை யகற்றி மெல்லவிரித்து அதனைக் கூர்ந்து நோக்கி; என்க.
 
(விளக்கம்) சினைக் கெடிறு - கருக்கொண்ட கெடிற்று மீன். இதனை, கெளிற்று மீன் எனவும் கெளித்திமீன் எனவும் கூறுப. இது விரல்களுக்கு உவமை. விரல் கவின் கொள்வனவாகக் கையின் ஏற்று என்க. மறைப்பொருளை உள்ளத்தே தாங்கிய அந்தணாளர் என்க. பொருள் - அறம்பொருளின்பம். ஏனோர் பிறர் என்பது பாணர் கூத்தர் முதலிய இரவலரை. 'இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறையக் கலம் பெயக் கவிந்த கழறொடித் தடக்கை'- மலைபடு. 576-577. இலம் - யாம் வழங்குதலிலேம். எழுத்து - நல்லிலக்கணக் கோடு. வேற்றுமை - ஈண்டுப் பகை யுணர்ச்சி.