பக்கம் எண் :

பக்கம் எண்:716

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          பிரச்சோ தனனெனும் பெருமக னோலை
          உரைச்சேர் கழற்கா லுதயணன் காண்க
          இருகுல மல்ல திவணகத் தின்மையிற்
          குருகுலக் கிளைமை கோடல் வேண்டிச்
    115    சேனையொடு சென்று செங்களம் படுத்துத்
          தானையொடு தருத றானெனக் கருமையிற்
          பொச்சாப் போம்பிப் பொய்க்களிறு புதைஇ
          இப்படித் தருகென வேவினே னெமர்களை
          அன்றைக் காலத் தந்நிலை நினையா
    120    தின்றைக் காலத் தெற்பயந் தெடுத்த
          கோமா னெனவே கோடல் வேண்டினேன்
 
          (அவ்வோலையில் எழுதப்பட்ட செய்தி)
          111 - 121 : பிரச்சோதனன்.........வேண்டினேன்
 
(பொழிப்புரை) அதன்கண் வரையப்பட்டுள்ள, ''பிரச்சோதனன் என்னும் அரசன் வரைந்து விடுத்த திருவோலை, இதனைப் பல்வேறு புகழ்களும் சேர்ந்த வீரக் கழலணிந்த காலையுடைய உதயண மன்னன் காண்க ! வேந்தே ! நின்குலமும் என்குலமும் அல்லது இப்பேருலகத்தில் மிக உயர்ந்த குலம் பிறிதொன்றில்லாமையால் நின்னுடைய குருகுலத்தின் உறவினைக் கொள்ளுதலை யான் பெரிதும் விரும்பி அக்காலத்தே நம்முட் பகைமை இருந்தமையால் படையோடு சென்று குருதியாற் சிவந்து போர்க்களத்தின்கண் நின்னைச் சிறைப்படுத்தி, நின் படையோடு என் நகரத்திற்குக் கொணர்தலும் எனக்கு அருஞ்செயலாயிருந்தமையால் உன்னுடைய சோர்வினை ஒற்றராலறிந்து அதனை ஏதுவாகக் கொண்டு மாய யானையினுள்ளே மறவர்களையும் படைக்கலங்களையும் மறைத்துவைத்து இவ்வஞ்சனையாலே நின்னைப் பற்றி என்பால்  கொணர்க ! என்று என் மறவர்களை நின்பால் ஏவினேன். அக்காலத்திற்குப் பொருந்தியதாக என்னாற் கருதப்பட்ட அந்த நிலைமையை நீ இப்பொழுது நினையாமல் இப்பொழுது நின்னை ஈன்ற தந்தையாகவே என்னைக் கொள்ளுதலைப் பெரிதும் விரும்பினேன்'' என்க.
 
(விளக்கம்) பெருமகன் - அரசன். உரை - புகழ். இருகுலம் என்றது தன் குலத்தையும் உதயணன் குலத்தையும். இவணகத்து - இவ்வுலகத்தில். குருகுலம் - உதயணன் குலம். கிளைமை - உறவுமுறைமை. தருதல் - கொணர்தல். அருமை - ஈண்டு இயலாமை மேனின்றது. பொச்சாப்பு - சோர்வு. பொய்க்களிறு - மாய யானை. இப்படி - இங்ஙனம் ஒருவழியால். எமர் - என் மறவர். யாம் பகைமைகொண்டிருந்த அந்தக் காலத்தே யான் நின்னைக் காண்டற்கும் உறவு பூணற்கும் இங்ஙனம் நின்னைச் சிறைக்கொண்டு காணுதலும் பின்னர் உறவு பூணலும் நன்றென்று எனக்குத் தோன்றிற்று. ஆதலின் அங்ஙனம் செய்தேன். அது தவறேயாயினும் பொறுத்தருளல் வேண்டும் என்பது கருத்து. இப்பொழுது யான்செய்த தவற்றினை யானே அறிந்து வருந்துகின்றேன் ஆகலின் என்னை மன்னித்து இப்பொழுது நின் தந்தைபோல மதிக்கவேண்டும் என்று வேண்டியபடியாம்.