பக்கம் எண் :

பக்கம் எண்:717

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          ஆமா னோக்கி யாயிழை தன்னொடு
          மகப்பெறு தாயோ டியானு முவப்பப்
          பெயர்த்தென் னகரி யியற்பட வெண்ணுக
    125    தன்னல திலளே தையலுந் தானும்
          என்னல திலனே யினிப்பிற னாகலென்
          பற்றா மன்னனைப் பணிய நூறிக்
          கொற்றங் கொண்டதுங் கேட்டனென் றெற்றென
          யான்செயப் படுவது தான்செய் தனனினிப்
 
                   (இதுவுமது)
            122 - 129 : ஆமான்...............செய்தனன்
 
(பொழிப்புரை) ''ஆமான் போன்ற நோக்கினையுடைய வாசவதத்தையோடு நீ, அவளை ஈன்ற தாயும் யானும் மகிழும்படி மீண்டும் இந்நகரத்திற்குப் பகையின்றி இயல்பாகவே வருதலை எண்ணுவாயாக. என் மகளாகிய வாசவதத்தைக்கு நின்னையன்றிச் சிறந்த கேளாவார் பிறர் இல்லை. நினக்கும் சிறந்த கேள் என்னையன்றிப் பிறரில்லை. இங்ஙனமாகலின் நீ இன்னும் எனக்குப் பிறனாதல் எங்ஙனம்? நின் பகை மன்னன் ஆகிய ஆருணி தாழக் கொன்று நீ அரசுரிமை கைக்கொண்டதனை யான் கேள்வியுற்றேன். விரைந்து என்னால் செய்யப்படும் செயலொன்றனை நீயே செய்துகொண்டனை;'' என்க.
 
(விளக்கம்) ஆமான் - காட்டுப்பசு. இதன் கண்களை மகளிர் கண்ணுக்கு உவமித்தல் மரபு. இதனை, ''ஆமான் அனைய மென் னோக்கி'' எனவரும் பிறர் கூற்றானும் உணர்க; (இறை. சூ. 57. மேற்.) தாயென்றது - வாசவதத்தையின் தாயை. நகரி - உஞ்சை நகரம். பற்றாமன்னன் - ஆருணி. கொற்றம் - அரசுரிமை. தான் என்றது உதயணனை.