பக்கம் எண் :

பக்கம் எண்:718

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          யான்செயப் படுவது தான்செய் தனனினிப்
    130    பாம்பு மரசும் பகையுஞ் சிறிதென
          ஆம்பொரு ளோதின ரிகழா ரதனாற்
          றேம்படு தாரோன் றெளிதலொன் றிலனாய்
          ஓங்குகுடை நீழ லுலகுதுயின் மடியக்
          குழுவிகொள் பவரி னிகழா தோம்பிப்
    135    புகழ்பட வாழ்க புகழ்பிறி தில்லை
 
                   (இதுவுமது)
            129 - 135 : இனி..................இல்லை
 
(பொழிப்புரை) "இனித் தமக்கு ஆக்கமாகும் பொருள் நூலை நன்கு ஓதியுணர்ந்தவர்கள் பாம்பும் அரசும் பகையும் சிறிதென்று கருதி இகழ்வாரல்லர். அதனால் தேன் துளிக்கும் மலர் மாலையை யணிந்த அரசனாகிய நீ பகைவர் சிறியர் என்று இகழாதே கொள்; அவரை ஆராய்ந்து தெளியாமலும் இராதே; விழிப்புடன் இருந்து நினது ஓங்கிய கொற்றவெண்குடை நீழலின்கண் இவ்வுலகில் வாழும் உயிரெல்லாம் இனிதே இன்புற்றிருக்கும்படி தம் மகவினைப் பாதுகாக்கும் நற்றாயர்போலச் சோர்வின்றி நின் குடிமக்களைப் பாதுகாத்துப் புகழுண்டாக வாழ்வாயாக ! இதனினுங் காட்டில் நினக்குச் சிறந்த புகழ் பிறிதில்லை;' என்க.
 
(விளக்கம்) "பாம்பும் அரசும் பகையுஞ் சிறிதென ஆம் பொருளோதின ரிகழார்' என்னும் இதனொடு, 'அளையுறைபாம்பு மரசு நெருப்பின முழையுறை சீயமு மென்றிவை நான்கு, மிளைய வெளிய பயின்றபு, வென் றெண்ணி, இகழி னிழுக்கந் தரும்' எனவரும் ஆசாரக்கோவையையும் (84) ஒப்புக்காண்க. உலகு - உலகில் வாழும் உயிர்கள்; ஆகுபெயர். 'குழவிகொள்பவரின் இகழாதோம்பி' என்னும் இதனோடு, 'காவல், குழவி கொள்பவரி னோம்பு மதி' (புறநா. 5); எனவும், 'குழவி கொள் வாரிற் குடிபுறந்தந்து' (பதிற். 6ஆம் பதிகம்) எனவும் பிற சான்றோர் கூறுதலும் நினைக.