பக்கம் எண் :

பக்கம் எண்:72

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           பாகனை யொழித்துக் கூன்மகள் கோல்கொளப்
           பொதியிற் சோலையுட் கதிரெனக் கவினிய
           கருங்கட் சூரற் செங்கோல் பிடித்த
     100    கோற்றொழி லாளர் மாற்றுமொழி விரவி
           நலத்தகு நங்கை போதரும் பொழுதின்
           விலக்கரும் வேழம் விடுதி ராயிற்
           காயப் படுதிர் காவலன் பணியென
           வாயிற் கூறி வழிவழி தோறும்
     105    வேக யானைப் பாகர்க் குணர்த்தி
 
         (காவலர் செயல்)
    97-105 ; பாகனை,,,,,,,,,,,,உணர்த்தி
 
(பொழிப்புரை) அவ்வண்டியைப்பண்ணுறுத்திக்  கொணர்ந்த பாகனை
  அகற்றிவிட்டு ஐராவதி என்னுங் கூன்மகள் கோலேந்தி நடத்தாநிற்பப்
  பொதியமலைச் சோலையிலே ஞாயிற்றின் கதிர்கள் போன்று
  அழகுடையனவாக வளர்ந்த கரிய கணுக்களையுடைய பிரம்பாகிய
  செவ்விய கோல்களைப்பற்றிய தொழிலையுடைய காவலாளர்
  வழியிலுள்ளாரை மாற்றுதற்குரிய ஆணை மொழிகளை விரவிச் சினமிக்க
  யானைகளின் பாகர்களை நோக்கி நீயிர் பெண்மை நலத்தால் தகுதிபெற்ற
  நங்கையாகிய நங்கோமகள் பதுமாபதி வரும்பொழுது தடுத்தற்கரிய
  யானைகளைச் செலுத்து வீராயின் ஒறுக்கப்படுவீர்! இஃது அரசன்
  ஆணையென்று வாயினாலே எடுத்துச் சொல்லி வழியெங்கணும் கூறி
  அறிவியாநிற்ப என்க.
 
(விளக்கம்) பாகன் - அவ்வண்டிக்குரிய பாகன்.
  மகளிர் ஊர்தியை மகளிரே ஊர்தல் மரபு. கூன்மகள்-அயிராபதி என்னும்
  ஒரு கூன்மகள்; இவள் பதுமாபதியின் தோழி. நங்கை - பதுமாபதி. இது
  காவலன் பணி என்க. உணர்த்தி-உணர்த்த,