பக்கம் எண் :

பக்கம் எண்:720

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          ஆனாக் காத லவந்திகை தன்னகர்
          மேனாட் காலை வெவ்வழற் பட்ட
    145    தீயுண் மாற்றம் வாயல வெனினும்
          உரையெழுதி வந்தவிவ் வோலையு ளுறாக்குறை
          பழுதா லென்று பதுமையை நோக்கப்
 
          (உதயணன் பதுமையை வினாதல்)
            143 - 147 : ஆனா............நோக்க
 
(பொழிப்புரை) 'குறையாத காதலையுடைய வாசவதத்தையினுடைய மாளிகையின்கண் பண்டு வெவ்விய தீப்பற்றிய காலத்தே அவள் தீயுள் இறந்த செய்தி உண்மையன்றெனினும், நும் மன்னனால் செய்தி எழுதப்பட்டுவந்த இந்த மந்திரவோலையின்கண் அச்செய்தி எழுதாது விடப்பட்ட செயல் குற்றமாகாதோ' என்று கூறி அத்தூதியை நோக்காநிற்ப; என்க.
 
(விளக்கம்) ஆனா - அமையாத. அவந்திகை : வாசவதத்தை. மேனாள் வெவ்வழற்பட்ட காலை என மாறுக. மாற்றம் - செய்தி. வாயல - உண்மையல்ல. உறாக்குறை - எழுதாது விடப்பட்ட காரியம். பதுமையை அதற்கு விடை வேண்டி நோக்கா நிற்ப என்க.