பக்கம் எண் :

பக்கம் எண்:721

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          பவழச் செவ்வாய் படிமையிற் றிறந்து
          முகிழ்விரல் கூப்பி முற்றிழை யுரைக்கும்
    150    பரும யானையிற் பற்றா ரோட்டிய
          பெருமையின் மிக்கவெம் பெருமகன் றன்னோ
          டொருநாட்டுப் பிறந்த வுயிர்புரை காதற்
          கண்ணுறு கடவுண் முன்னர் நின்றென்
          ஒண்ணுதற் குற்றது மெய்கொலென் றுள்ளிப்
    155    படுசொன் மாற்றத்துச் சுடர்முகம் புல்லெனக்
          குடைகெழு வேந்தன் கூறாது நிற்பச்
 
              (பதுமை விடையளித்தல்)
              148 - 156 : பவழ............நிற்ப
 
(பொழிப்புரை) அம்மன்னவன் கருத்துணர்ந்த அப்பதுமை தனது பவழம்போன்று சிவந்த வாயைப் பாவை திறக்குமாறே போலத் திறந்து கைகுவித்துக் கூறுவாள், 'வேந்தே! பண்ணுறுத்தப்பட்ட யானைப் படைகளையுடைய பகைவர்களை வென்று துரத்திய பெருமையினாலே மிக்க எம்பெருமானாகிய பிரச்சோதன மன்னன் தன்னோடே ஒரு நாட்டிற் பிறந்தவனும் தனக்கு உயிர் போன்ற அன்புடையோனும் அகக்கண்ணுடையவனும் ஆகிய ஒரு முனிவன்பாற் சென்று நின்று ஒள்ளிய நுதலையுடைய தன் மகளாகிய வாசவதத்தைக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் செய்தியால் நெஞ்சம் வருந்தித் தன் முகம் பொலிவிழப்ப, அச்சொல் மெய்யோ ? பொய்யோ ? என்று ஐயுற்ற நினைவினையுடையனாய், வெற்றிக்குடை பொருந்திய அவ்வேந்தன் தான் வந்த காரியத்தை அம் முனிவனுக்குக் கூறாமல் வாளா நிற்ப ;' என்க.
 
(விளக்கம்) படிமை - பாவை; பண்புமாம். முற்றிழை : அன்மொழி; பதுமை. பருமம் - பண்ணுறுத்துதல்; யானை மேலிடுந் தவிசுமாம். பற்றார் - பகைவர். பெருமகன் : பிரச்சோதனன். கண் - அறிவுக்கண். கடவுள் - முனிவன். ஒண்ணுதல் : வாசவதத்தை. உற்றது - தீயுள் மூழ்கி இறந்த செய்தி. வேந்தன் : பிரச்சோதனன். முனிவன் - முக்காலமும் உணர்பவனாகலின் தான் வந்த காரியத்தை உணர்ந்து கூறுக என்று கருதிக் கூறாது நின்றான் என்பது கருத்து.