உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
சினப்போர்ச் செல்வ முன்ன
மற்றுநின்
அமைச்சரோ டதனை யாராய்ந்
தனன்போல் நூனெறி
மரபிற் றானறிவு தளரான் 160 தொடுத்த
மாலை யெடுத்தது போல
முறைமையின் முன்னே தெரிய
வவனெம் இறைமகற்
குரைத்தன னித்துணை யளவவள்
மாய விருக்கைய ளாய்வ
தாமென நீட்ட
மின்றவ ணீயள விடினே 165 கூட்ட மெய்து
நாளு மிதுவென இன்றை
நாளே யெல்லை
யாகச் சென்ற
திங்கட் செய்தவ னுரைத்தனன்
|
|
(இதுவுமது) 157
- 167 : சினம்............உரைத்தனன்
|
|
(பொழிப்புரை) "வெகுளிமிக்க போராற்றலையுடைய வேந்தனே !
அம் முனிவன்றானும் தன் ஓதி ஞானத்தால் உணர்ந்தவனாய் நின்னுடைய அமைச்சரோடே இருந்து
அந்நிகழ்ச்சியை ஆராய்ந்தறிந்தவன்போலே நூல் கூறும் முறைமையோடே தான் சிறிதும் அறிவு
தளராதவனாய்த் தொடுத்து வைத்த மாலைகளை எடுத்து எடுத்துக் காட்டுமாறு போலே நிகழ்ந்த
முறைப்படி எம்மரசன் முன்னரே தெரிந்துகொள்ளும்படி கூறினன். பின்னரும் ''அவ்வாசவதத்தை
இவ்வளவு காலம் பிறர் உணராமல் கரந்துறைதலையுடையாள். நின்னுள் ஆராய்கின்ற காரியமும்
இனி நிகழ்வதாம்'' என்றும், ''அக்காரியம் நிகழுங்காலந் தானும் நீளியதன்று.
அவ்விடத்திற்கு நீ நின்தூதரைக் கொண்டு அளவளாவுமிடத்து அவளைக் காண்டல் கூடும். அக்
காட்சி கிடைக்கும் நாளும் இந்த நாளாம்'' என்றும் இற்றை நாளையே அந்நாளாகவும்
குறிப்பிட்டு அத்தவமுனிவன் கழிந்த திங்களிலேயே எம்பெருமானுக்குக் கூறினன்';
என்க.
|
|
(விளக்கம்) சினப்போர்ச் செல்வ என்றது பதுமை உதயணனை விளித்தபடியாம். நின் அமைச்சர் என்றது யூகி
முதலியோரை. தொடுத்து வைத்த மாலைகளை இன்னின்ன மாலை என்று எடுத்து எடுத்துக்
காட்டுவதுபோல என்க. அவன் - அம்முனிவன். எம்மிறை மகன் : பிரச்சோதனன். அவள் :
வாசவதத்தை. மாய இருக்கையள் - மறைந்திருத்தலையுடையாள். ஆய்வது - நீ நின் நெஞ்சினுள்
ஆராய்வது : அஃதாவது - பிரச்சோதனன் வாசவதத்தையை எப்பொழுது காணல்கூடும் என்று
நினையும் நினைப்பு. முனிவன் கூறி வருங்கால் எம்மரசன் இங்ஙனம் நினைத்தான். அதனையும்
அம்முனிவன் உணர்ந்து கூறினன் என்பது கருத்து. ஆய்வதுஆம் - நீ நினைவதும் கைகூடும்.
அக்காலமும் நீட்டமின்று என்றவாறு. அவண் - அந்நாட்டிற்கு, அளவிடின் - அளவளாவுதல்
செய்யின். செய் தவன் - மிகச் செய்த தவத்தையுடையவன். சென்ற திங்கள் - கழிந்த
திங்கள்.
|