பக்கம் எண் :

பக்கம் எண்:726

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          வந்தோர்க் கொத்த வின்புறு கிளவி
    180    அமிர்துகலந் தளித்த வருளின னாகித்
          தமர்திறந் தேவி தானுங் கேட்கென
          வேறிடம் பணித்தவர் வேண்டுவ நல்கி
          யாறுசெல் வருத்த மூறின் றோம்பி
 
         (உதயணன் வந்தோரை உபசரித்தல்)
          179 - 183 : வந்தோர்க்கு...........ஓம்பி
 
(பொழிப்புரை) மேலும் அப் பொருள்களைக் கொணர்ந்து வந்தவர்களுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ற இன்புறுதற்குக் காரணமான மொழிகளிலே அன்பாகிய அமிழ்தத்தையும் கலந்து வழங்கியவனாய்க் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தைதானும் தன் சுற்றத்தார் நலனைக் கேட்கக்கடவாள் என அதற்கு வேண்டுவன செய்து, அத் தூதர் முதலியோர் இனி துறைதற்கு வேறு வேறு இடங்களையும் வழங்கி அவர்க்கு வேண்டுவனவாகிய உண்டி உடை முதலியனவும் வழங்கி அவர் வழி நடந்த வருத்தத்தை இடையூறின்றிப் பரிகரித்து; என்க.
 
(விளக்கம்) வந்தோர் : உஞ்சையினின்றும் வந்த தூதர் முதலியோர். தமர் : பிரச்சோதனன் முதலியோர். கேட்கென : அதற்கு ஆவன செய்து என்க. அவர் : அத்தூதர் முதலியோர். ஆறு செல் வருத்தம் - வழி நடந்த வருத்தம்.