பக்கம் எண் :

பக்கம் எண்:727

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          அவந்தியர் கோமா னருளிட நூனெறி
    185    இகழ்ந்துபிழைப் பில்லா வியூகி சென்றிவண்
          நிகழ்ந்ததுங் கூறிநின் னீதியும் விளக்கி
          நெடித்தல் செல்லாது வாவென வழிநாள்
          விடுத்தன னவரொடு விளங்கிழை நகர்க்கென்.
 
             (உதயணன் யூகிக்குக் கூறுதல்)
           184 - 188 : அவந்தியர்..........நகர்க்கென்
 
(பொழிப்புரை) பின்னர் நூல்நெறியினை இகழ்ந்து பிழைத்தல் இல்லாத யூகி கேள்! அவந்தி நாட்டரசன் நின்னை ''வருக!'' என்று அருளிச் செய்தமையாலே நீ அம் மன்னன் தூதரொடு வாசவதத்தையின் பிறந்தையாகிய உஞ்சை நகரத்திற்குச் சென்று இங்கு நிகழ்ந்ததனையும் சொல்லி நின்னுடைய நீதிகளையும் விளக்கி அந்நகரத்தின்கண் நெடிது தாமதியாமல் மீண்டு வருக என்று கூறி மறுநாள் அத் தூதுவரொடு அவனையும் உஞ்சை நகரத்திற்குப் போக்கினன்; என்க.
 
(விளக்கம்) அவந்தியர் கோமான் : பிரச்சோதனன். அருளிட - அருளிச் செய்தமையால். யூகி : அண்மைவிளி. நெடித்தல் செல்லாது - நெடிது தாமதியாமல். வழிநாள் - மறுநாள். அவரொடு - அத்தூதுவரொடு. நகர் - உஞ்சை.

             10. பிரச்சோதனன் தூதுவிட்டது முற்றிற்று.