பக்கம் எண் :

பக்கம் எண்:729

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
         கரும மெல்லா மவனொடு நம்மிடை
         ஒருமையி னொழியா துரைக்கென வுணர்த்தி
         ஏற்றோர்ச் சாய்த்தவிக் குருகுலத் தகத்தோர்
         ஆற்றலி லாளன் றோற்றினு மவந்தியர்
  15     ஏழ்ச்சி யின்றிக் கீழ்ப்பட் டொழுகினும்
         இகத்த லில்லை யிருதிறத் தார்க்கெனப்
         பயத்தொடு புணர்ந்த பழிப்பில் செய்கையின்
         நளிபுன னாட்டொடு நகர மறியத்
         தெளிவிடை யிட்ட திண்ணிதிற் செய்கெனப்
  20     பல்பொருட் கருமஞ் சொல்லிய பின்னர்
 
             (உதயணன் யூகிக்குக் கூறியன)
              11 - 20 : கருமம்.........பின்னர்
 
(பொழிப்புரை) பின்னர் அம்மன்னவன் யூகியை நோக்கி, "நண்பனே ! நீ ஆண்டுச் சென்று அப் பிரச்சோதன மன்னனுக்கும் நமக்கும் ஒருமையுண்டாதற்கு வேண்டிய காரியங்களையெல்லாம் கூறுவாயாக" என்று அறிவித்து மேலும் "பகை மன்னரை அழித்த வெற்றியினையுடைய இந்தக் குருகுலத்தின்கண் பிற்காலத்தே அரசாளும் ஆற்றலில்லாதவன் ஒருவன் பிறந்தவிடத்தும் அங்ஙனமே அந்த அவந்திநாட்டு மன்னர் குடிப்பிறந்தோர் பிற்காலத்தே எழுச்சியில்லாமல் கீழ்ப்பட்டு நடந்தவிடத்தும் இவ்விருகுலத்தாரும் ஒருவரையொருவர் விட்டு நீங்குதலில்லை" என்று ஊதியத்தோடு கூடிய வசையில்லாத நற்செயலை மேற்கொண்டுள்ள குளிர்ந்த நீரையுடைய அவன் நாடும் நகரங்களும் அறியும்படி தெளிவு விரவிய செயல்களைத் திட்பமாகச் செய்வாயாக !" என்று இங்ஙனம் பல்வேறு பொருள்களையுடைய காரியங்களையும் அந்த யூகிக்குச் சொல்லிய பின்னர் ; என்க.
 
(விளக்கம்) அவனொடு : பிரச்சோதனனோடு. அவனும் நாமும் ஒருமையின் ஒழியாமைக்குக் காரணமான கருமம் எல்லாம் என்பது கருத்து. ஏற்றோர் - பகைவர். ஆற்றலிலாளன் - வலிமையில்லாதவன். அவந்தியர் - பிரச்சோதனன் குலத்தினர். ஏழ்ச்சி - எழுச்சி. இகத்தல் - நீங்குதல். இரு திறத்தார்க்கும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. பயம் - ஊதியம். நளி - குளிர்ந்த. நாடு - ஈண்டு ஊர்கள். இட்ட : பெயர்.