பக்கம் எண் :

பக்கம் எண்:730

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
           அருமலை யடுக்கத் தயிரா பதமெனும்
           பெருமலைப் பிறந்து பெறுதற் கரிய 
           தீதுதீர் சிறப்பிற் சிங்கச் சுவணமென்
           றோசை போகிய வொண்பொற் கலங்களும்
  25       கலக்கமில் சிறப்பிற் காம்போ சத்தொடு
           நலக்காந் தாரமென் னாட்டுப் பிறந்த
           இலக்கணக் குதிரை யிராயிரத் திரட்டியும்
           ஆருணி வேந்தை வென்றுகைப் படுத்தின
           தாரணி புரவி தகைபெறப் பூண்டன
  30       இருநூற் றைம்பதிற் றிரட்டி தேரும்
           ஒருநூ றாகிய வுயர்நிலை வேழமும்
 
           (பிரச்சோதனனுக்கு உதயணன் விடுத்த பொருள்)
                21 - 31 : அருமலை.........வேழமும்
 
(பொழிப்புரை) ஏறுதற்கரிய பக்கமலைகளையுடைய ''அயிராபதம்'' என்னும் பெரிய மலையிலே பிறந்து பெறுதற்கரிய குற்றமற்ற சிறப்பினையுடைய ''சிங்கச் சுவணம்'' என்னும் புகழ் பரந்த ஒள்ளிய பொன்னாலியன்ற அணிகலன்களும் வற்கடம் முதலியவற்றால் கலங்குதலில்லாத சிறப்பினையுடைய காம்போசம் என்னும் நாட்டினும் அழகிய காந்தாரம் என்னும் நாட்டினும் பிறந்த நல்லிலக்கணம் பொருந்திய நாலாயிரம் குதிரைகளும் ஆருணி மன்னனைக் கொன்று கைப்பற்றப்பட்ட மாலையணிந்த குதிரைகள் அழகுண்டாகப் பூட்டப்பட்டனவாகிய ஐந்நூறு தேரும் நூறு உயரிய நிலைமையினையுடைய யானைகளும்; என்க.
 
(விளக்கம்) அயிராபதம் - ஒரு மலை. ஓசை - புகழ். பொற்கலன்கள் - பொன்னாலியன்ற அணிகலன்கள். கலக்கம் - பகைவர் முதலியோரால் உண்டாகும் மனக்குழப்பம். நலக்காந்தாரம் - அழகிய காந்தாரம். இலக்கணம் - குதிரையிலக்கணம். இராயிரத்திரட்டி - நான்காயிரம். தார் - மாலை. தகை - அழகு. இருநூற்றைம்பதிற்றிரட்டி - ஐந்நூறு.