பக்கம் எண் :

பக்கம் எண்:733

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
          ஓரிரு பதின்மரை யாரமர்க் கடந்து
          கோல்கொள வென்ற கோபா லகனைச்
  45      சால்புளிப் பயந்த சாயாக் கற்பின்
          நீல வேற்க ணிரைதொடிக் கீகெனப்
 
             (கோபாலகன் தாய்க்கு விடுத்த மகளிர்)
                   43 - 46 : ஓரிரு........ஈகென
 
(பொழிப்புரை) ம்மகளிருள் இருபதின்மரைத்தான் கடத்தற்கரிய போரினைக் கடந்து செங்கோல் கைக்கொள்ளும்படி வென்றுதவிய கோபாலகனை மாண்போடு ஈன்ற பிறழாத கற்பினையுடைய கரிய வேல் போன்ற கண்ணை உடைய நிரல்பட்ட வளையலணிந்த தேவிக்கு அளித்திடுக! என்று கூறி; என்க.
 
(விளக்கம்) கோல் - செங்கோல். கோபாலகன் : பிரச்சோதனன் பட்டத்தேவியருள் ஒருத்தி மகன். சால்புளி - சால்போடு. இதன்கண் உளி ஏழாவதன் சொல்லுருபு. அது, மூன்றாவதன் பொருளில் மயங்கிற்று. நிரைதொடி : கோபாலகன் தாய்.