பக்கம் எண் :

பக்கம் எண்:734

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
          பொற்கோங் கேய்ப்ப நற்கல னணிந்த
          முப்பதி னிரட்டி முற்றிழை மகளிரைப்
          பால குமரற்குங் கோபா லகற்கும்
  50      பால்வே றிவர்களைக் கொடுக்கெனப் பணித்து
 
        (கோபாலகற்கும் பாலகுமரற்கும் விடுத்த மகளிர்)
                 47 - 50 : பொன்.........பணித்து
 
(பொழிப்புரை) பொன்னிறப் பூக்களை நிரம்ப மலர்ந்த கோங்கமரம் போன்று நல்ல பொன்னணிகலன்களை நிரம்ப அணிந்த அறுபது மகளிரைக் காட்டிப் பாலகுமரனுக்கும் கோபாலகனுக்கும் இவர்களைக் கூறுபடுத்தி வழங்கிடுக! என்று கட்டளையிட்டு; என்க.
 
(விளக்கம்) பொற்கோங்கு - பொன்னிறப்பூப் பூத்த கோங்கமரம். இது பொன்னணிகலன்களை நிரம்ப அணிந்த மகளிர்க்கு உவமை. "பூத்த கோங்குபோல் பொன்சுமந்துளார்" எனவரும் சீவகசிந்தாமணியும் (419) காண்க. பாலகுமரன் : பிரச்சோதனன் மகன். பால் வேறுபடுத்தி என்க. பால் - கூறு