பக்கம் எண் :

பக்கம் எண்:742

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
           மதுக மதிர முதலாக் கூறும்
           பதனுறு நறுங்கள் பட்டாங்கு மடுப்ப
           உண்டுமகிழ் தூங்கித் தண்டா வின்பமொடு
  90       பண்கெழு முழவின் கண்கெழு பாணியிற்
           கண்கவ ராடல் பண்புளிக் கண்டும்
           எல்லெனக் கோயிலுள் வல்லோன் வகுத்த
           சுதைவெண் குன்றச் சிமைபரந் திழிதரும்
           அந்தர வருவி வந்துவழி நிறையும்
  95       பொற்சுனை தோறும் புக்குவிளை யாடியும்
 
        (உதயணன் வாசவதத்தையோடும்பதுமாபதியோடும் இன்புற்றமர்ந்து வாழ்தல்)
              87 - 95 : மதுகமதிர.........ஆடியும்
 
(பொழிப்புரை) உதயணமன்னன் அத்தேவிமார் இருவரோடும் மதுகமதிரம் முதலாகக் கூறப்படும் பதமான நறிய கள் வகைகளைத் தூயனவாக வாக்கிக்கொடுப்பப் பருகிக் களிப்புற்றுக் குறையாத இன்பத்தோடே பண்ணமைந்த முழவினது கண்ணில் பொருந்திய தாளத்தோடே காண்போர் கண்ணைக் கவருமியல்புடைய கூத்தினைப் பண்போடு கண்டும் தொழில் வல்லவன் ஞாயிற்று மண்டிலம்போல ஒளிவிடும்படி அரண்மனைக்குள் இயற்றிச் சுதை தீற்றிய வெள்ளிமலையினது உச்சியினின்றும் பரவி வீழ்கின்ற வானருவிநீர் வந்து நிறைந்து வழிகின்ற பொன்னாலியன்ற செய்சுனைதோறும் புகுந்து நீர்விளையாடியும்; என்க.
 
(விளக்கம்) மதுகமதிரம் :  பண்புத்தொகை : உம்மைத் தொகையுமாம். பதன் - பதம். பட்டாங்கு - தூயனவாக. மடுப்ப - வாக்கிக் கொடுப்ப. மகிழ்தூங்கி - களித்து. பாணி - தாளம். ஆடல் - கூத்து. வல்லோன் எல்லென வகுத்த குன்றம் என்க. எல் - ஞாயிற்றுமண்டிலம். குன்றம் - செய்குன்றம். சிமை - உச்சி. அந்தர அருவி - வான அருவி. வந்து நிறைந்துவழியும் என்க. சுனை - செய்சுனை. பொன்னாற் செய்த சுனை என்க. நீர் விளையாடியும் என்க..