பக்கம் எண் :

பக்கம் எண்:743

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
         அந்தர மருங்கி னிந்திரன் போலப்
         புலந்தும் புணர்ந்துங் கலந்துவிளை யாடியும்
         நாணா டோறும் நாள்கழிப் புணரா
         தானாது நுகர்பவா லன்புமிகச் சிறந்தென்.
 
                     (இதுவுமது)
           96 - 99 : அந்தரம்..........சிறந்தென்
 
(பொழிப்புரை) வானுலகத்தின்கண் இந்திராணி முதலிய தேவிமாரோடே இன்புற்று வாழும் இந்திரன்போல அம்மன்னவன் அத் தேவிமாரோடு நாள்தோறும் நாள்தோறும் ஊடியும் கூடியும் சேர்ந்து விளையாடியும் நாள் கழிதலை உணராது ஒழிவின்றி அன்பு மிகவும் பெருகாநிற்ப இன்பம் நுகர்ந்து வாழ்வாராயினர்;  என்க.
 
(விளக்கம்) அந்தரம் - வானுலகம். தேவிமாரோடும் இன்புறும் இந்திரன்போல என்க. புலந்தும் - ஊடியும்.

  "ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்
   கூடி முயங்கப் பெறின்"   (குறள். 1330)


என்பவாகலின் புலந்தும் புணர்ந்தும் என்றார். கழிப்பு - கழிதலை. ஆனாது - ஒழியாது. நுகர்ப - நுகர்வர். அரசனும் தேவிமாரும் இங்ஙனம் நுகர்ப என்க.

               11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது முற்றிற்று