பக்கம் எண் :

பக்கம் எண்:745

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           நன்னுதன் மகளிரை மின்னேர் நுண்ணிடை
           வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
     10    கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை
           கொடுத்த காலை யடுத்த வன்போ
           டரச னுலாவெழு மற்ற நோக்கித்
           தேவிய ரிருவரு மோவியச் செய்கையின்
           நிலாவிரி முற்றத்துக் குலாவொ டேறிப்
     15    பந்தடி காணிய நிற்ப விப்பால்
 
                 (இதுவுமது)
          8 - 15 : மின்னேர்...............நிற்ப
 
(பொழிப்புரை) மின்னலைஒத்த நுண்ணிய இடையினையுடைய வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் நன்கு கூறுசெய்து வழங்கிய பொழுது அத் தேவிமார் இருவரும் அத் தோழிமாரிடத்தே பொருந்திய அன்புடையோராய் அம் மன்னன் உலாப்போகும் செவ்விபார்த்து ஓவியம்போன்று இயற்றப்பட்ட நிலாமுற்றத்தின் கண் ஒருவரோடொருவர் குலாவி ஏறி அத்தோழிமாரை இரு கூறாக நிறுத்திப் பந்தடிக்கச்செய்து அப் பந்தாட்டத்தினைக் காண்டற்கு ஒருப்பட்டு நிற்குங் காலத்தே; என்க.
 
(விளக்கம்) கூறு - பங்கு. நெடுந்தகை : உதயணன். வீறு - வேறொன்றிற்கில்லாத அழகு. அத்தோழிமாரிடத்து அடுத்த அன்போடு என்க. அரசன் : உதயணன். அற்றம் - செவ்வி. நிலாவிரி முற்றம் - நிலாமுற்றம்.