பக்கம் எண் :

பக்கம் எண்:746

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
         
    15    பந்தடி காணிய நிற்ப விப்பால்
          வெங்கோ லகற்றிய வென்றித் தானைச்
          செங்கோற் சேதிபன் செவிமுதற் சென்று
          வயந்தக னுரைக்கு நயந்தனை யருளின்
          மற்றுநின் றோழியர் பொற்றொடிப் பணைத்தோட்
    20    டோழியர் தம்மோ டூழூ ழிகலிப்
          பந்துவிளை யாட்டுப் பரிந்தன ரதனாற்
 
         (வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்)
          15 - 21 : இப்பால்................பரிந்தனர்
 
(பொழிப்புரை) இனி, இவ்விடத்தே ஆருணியைக் கொன்று அவனது கொடுங்கோலை அகற்றிய வெற்றியுடைய படைகளையும் செங்கோலையும் உடைய உதயணமன்னன்பால் வயந்தகன் சென்று அவன் செவியின்கண் கூறுவான் -- ''வேந்தே! நீ விரும்புவதுண்டாயின் கேட்டருள்க! நின்னுடைய வாழ்க்கைத் துணைவியராகிய தேவிமார் இருவரும் பொன்னாலியன்ற வளையலையும் மூங்கில்போன்ற தோள்களையுமுடைய தத்தம் தோழிமாரோடு சென்று அத்தோழிமாரை இருகூறுபடுத்தி அவர், மாறுபட்டு முறை முறையாகப் பந்து விளையாடுதலைக் காண்டற்கு விரும்பினர்;'' என்க.
 
(விளக்கம்) வெங்கோலகற்றிய என்றது ஆருணியைக் கொன்று அவனது கொடுங்கோலை அகற்றிய என்பதுபட நின்றது. சேதிபன் - உதயணன். மறைச் செய்தி யாதலின் செவியின்கண் உரைத்தல் வேண்டிற்று. தோழியர் - வாழ்க்கைத் துணைவியர் என்பதுபட நின்றது. ஊழூழ் - முறையே முறையே. பரிந்தனர் - விரும்பினர்.