பக்கம் எண் :

பக்கம் எண்:748

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           சென்றனை காண்கென நன்றென விரும்பிப்
           படையுலாப் போக்கி யிடைதெரிந் திருந்தாங்
           கியாவரு மறியா வியல்பிற் கரந்து
     30    காவலன் பிடிமிசைக் காண்டக வேறிப்
           பல்வகை மகளிரொடு பையெனச் சென்றுதன்
           இல்லணி மகளிரொ டியைந்தன னிருப்ப
 
          (உதயணன் மறைந்து சென்று பந்தடி காணல்)
             27 - 32 : நன்றென...............இருப்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன் நன்று ! நன்று ! என்று மகிழ்ந்து அப் பந்தாட்டத்தைக் காண்டற்குப் பெரிதும் விரும்பித் தான் திருவுலாப் போவான்போலக் காட்டிற்குப் படைகளை மட்டும் உலாவின்கட் போக்கித் தான் தனித்திருந்து செவ்வி தெரிந்து அவ்விடத்தே தன்னை யாவரும் அறியாதபடி பெண் வேடத்தில் மறைத்து அக்காவலன் ஒரு பிடியானையின் மேலேறி ஊர்திகளின்கண் அவ்வாடலைக் காணச் செல்லும் பல்வேறுவகைப்பட்ட மகளிர் குழாத்தினூடே புகுந்து மெல்ல அவரோடு சென்று தன் இல்லத்திற்கு அணியாகிய மகளிரின் கூட்டத்தோடு பொருந்தி இரா நிற்ப; என்க.
 
(விளக்கம்) நன்றென மகிழ்ந்து, அவ்வாட்டங் காண்டலை விரும்பி என்க. தான் திருவுலாப் போந்ததாக அம்மகளிர் கருதும் பொருட்டுப் படையை மட்டும் உலாப்போக்கினான் என்பது கருத்து. பெண் வேடத்தில் கரந்து என்க. காவலன் : உதயணன். காண்டக - அழகாக. பல்வகை மகளிர் என்றது ஆட்டங்காண வருகின்ற நகர் வாழ் நங்கையர் என்க. அவர் பிடி முதலிய ஊர்திகளில் வருதலால் இவனும் பிடியேறி அவருடன் சென்றான் என்பது கருத்து.