உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
இகலும்
பந்தி னிருவரும் விகற்பித்
தடிநனி காண்புழி யணங்கேர் சாயற்
35 கொடிபுரை நுண்ணிடைக் கொவ்வைச்
செவ்வாய்
மதுநாறு தெரியன் மகதவன்
றங்கை பதுமா
பதிதன் பணியெதிர் விரும்பி
விராய்மலர்க் கோதை யிராசனை
யென்போள்
கணங்குழை முகத்தியை வணங்கினள் புகுந்து
40 மணங்கமழ் கூந்தலும் பிறவுந்
திருத்தி
அணங்கெனக் குலாஅ யறிவோர் புனைந்த
|
|
(இராசனை)
33 - 41 :
இகலும்...............உலாஅய்
|
|
(பொழிப்புரை) ஒருவரோடொருவர் மாறுபடுதற்குக் காரணமான பந்தடி காண முற்பட்ட வாசவதத்தையும்
பதுமாபதியும் தத்தம் தோழியரைக் கூறுபடுத்தி எதிர் எதிர் நிறுத்தி அத்தோழிமாருடைய
பந்தாட்டத்தினைக் கூர்ந்து காணுங்கால், தெய்வ மகள்போன்ற சாயலையும் பூங்கொடியை
யொத்த நுண்ணிய இடையினையும், கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயினையும்
தேன்மணங்கமழும் மாலையினையுமுடையவளும் மகத மன்னன் தங்கையுமாகிய பதுமாபதியினுடைய
கட்டளையைப் பெறுதற்கு விரும்பி அவ்வரசியின் தோழியாகிய விராய் மலர் மாலையணிந்த
இராசனை என்பவள் வட்டமான குழையையணிந்த முகத்தினையுடைய அப்பதுமாபதியைக் கைகூப்பி
வணங்கியவளாய்ப் பந்தாடு களத்தின்கண் சென்று, நறுமணங்கமழும் கூந்தலையும், ஆடை
அணிகலன்களையும் ஆடுதற்கேற்பத் திருத்திக்கொண்டவளாய் அக்களத்தின்கண் திரியுமொரு
தெய்வப்பெண் என்று கூறும்படி இயங்கி; என்க.
|
|
(விளக்கம்) இகலுதல் - மாறுபடுதல். இருவரும் - வாசவதத்தையும்
பதுமாபதியும். விகற்பித்தல் - இரு கூறு படுத்து நிறுத்துதல். அடி - பந்தடி. அணங்கு -
தெய்வப்பெண். மகதவன் - தருசகமன்னன். பணி - கட்டளை. விராய் மலர் - ஒருவகை மலர்.
இராசனை - பதுமாபதியின் தோழி. முகத்தி : பதுமாபதி. பிறவும் என்றது ஆடை அணிகலன்களை.
குலாஅய் - திரிந்து.
|