பக்கம் எண் :

பக்கம் எண்:75

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           வாயில் புக்கபின் வைய நிறீஇ
           ஆய்வளைத் தோளி யகம்புக் கருளென
           வைய வலவன் வந்தனன் குறுகிப்
           பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
     5     மஞ்சுவிரித் தன்ன வைய வாயிற்
           கஞ்சிகை கதுமெனக் கடுவளி யெடுப்ப
           வெண்முகிற் பிறழு மின்னென நுடங்கித்
           தன்னொளி சுடருந் தையலை யவ்வழிக்
 
           1-8 ; வாயில்.........தையலை
 
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதி அநங்கன்
  திருக்கோயில்  முன்றிலையடைதலும் அவ்வண்டிப்பாகன் வண்டியை
  நிறுத்தி எதிர்வந்து அழகிய வளையணிந்த கைகளையுடைய இறைமகளே!
  வண்டியினின்றும் இறங்கித் திருக்கோயிலின்கண் புகுந்தருள்க ! என்று
  கூறி வண்டியில் பூட்டப்பட்ட எருதுகளின், பூட்டினைத் தெரித்துவிட்ட
  பின்னர் அவ்வண்டியின்கண் வெண்முகிலை விரித்து வைத்தாற்போன்ற
  திரைச் சீலையைக் காற்று ஒதுக்குதலாலே அதனகத்திருந்து
  வெண்முகிலினூடே பிறழாநின்ற மின்னற்கொடிபோன்று அசைந்து
  தண்ணொளி பரப்பும் பதுமா பதியை என்க.
 
(விளக்கம்) நீறீஇ - நிறுத்தி. தோளி - விளி.
  வையவலவன் - வண்டிப்பாகன்.   கஞ்சிகை-திரைச்சீலை.
  கதுமென- விரைவுக் குறிப்பு. மஞ்சு-முகில். நுடங்கி-அசைந்து.
  வெய்யவொளியு முண்டாகலின், தண்ணொளி என்றார்.
  தையல் - பதுமாபதி.