பக்கம் எண் :

பக்கம் எண்:751

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           வேறுவே றியற்கைய கூறுகூ றமைத்த
           வெண்மையுஞ் செம்மையுங் கருமையு முடையன
           தண்வளி யெறியினுந் தாமெழுந் தாடுவ
           கண்கவ ரழகொடு நெஞ்சக லாதன
           ஒண்பந் தோரேழ் கொண்டன ளாகி
     55    ஒன்றொன் றொற்றி யுயரச் சென்றது
           பின்பின் பந்தொடு வந்துதலை சிறப்பக்
           கண்ணிமை யாம லெண்ணுமி னென்று
           வண்ண மேகலை வளையொடு சிலம்பப்
           பாடகக் கான்மிசைப் பரிந்தவை விடுத்தும்
 
               (இராசனை பந்தடித்தல்)
             50 - 59 : வேறு............விடுத்தும்
 
(பொழிப்புரை) வேறு வேறு தன்மையையுடைய கூறு கூறாகக் குவிக்கப்பட்டனவும் வெண்மையும் செம்மையும் கருமையும் உடையனவும் குளிர்ந்த காற்று வீசுமிடத்தும் தாமே எழுந்து ஆடுவனவும் காண்போர் கண்ணைக் கவரும் அழகோடே அவர் தம் நெஞ்சைவிட்டு அகலாதனவும் ஆகிய ஒளியுடைய ஏழு பந்துகளை அவ்விராசனை தேர்ந்து எடுத்துக் கொண்டவளாய் முன் எறிந்த ஒரு பந்து மற்றொரு பந்தால் புடைக்கப்பட்டு உயரச் சென்று மீண்டு வருங்கால், பின்னே பின்னே அடித்த பந்துகளோடே மாலைபோல வந்து சிறவா நிற்பவும், பந்தடி காண்பவரை நோக்கி ''நீவிர் கண்ணிமையாமல் விழிப்புடனிருந்து எண்ணிக் கொள்ளுங்கோள்!'' என்று கூறித் தனது பன்னிற மணிகளாற் புனைந்த மேகலையும் வளையலும் ஆரவாரிக்கும்படி பாடகமணிந்த காலின்மேல் அவையிற்றை ஏற்றுக்கொண்டு விண்ணில் செல்லவிடுத்தும்; என்க.
 
(விளக்கம்) இயற்கைய - தன்மையுடையன. தண்வளி - குளிர்ந்த மென்காற்று. ஒற்றி - புடைத்து. எண்ணுமின் என்றது தன் மாற்றாரை நோக்கிக் கூறியபடியாம். சிலம்ப - ஆரவாரிப்ப. பாடகம் - ஒருவகைக் காலணி. பரிந்து - ஏற்றுக்கொண்டு.