உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
65 அன்ன மென்னடை யவந்திகை
யுவந்தவள்
கண்மணி யனைய வொண்ணுதற்
பாவை
காஞ்சன மாலை வாங்குபு
கொண்டு பிடித்த
பூம்பந் தடித்துவிசும் பேற்றியும்
அடித்த பந்தால் விடுத்தவை யோட்டியும்
70 குழன்மேல் வந்தவை குவிவிரற்
கொளுத்தியும்
நிழன்மணி மேகலை நேர்முகத்
தடித்தும்
கண்ணியிற் சார்த்தியுங் கைக்குட்
போக்கியும்
உண்ணின்று திருத்தியும் விண்ணுறச்
செலுத்தியும்
வேயிருந் தடந்தோள் வெள்வளை யார்ப்ப
75 ஆயிரத் தைந்நூ றடித்தன
ளகலச்
|
|
(காஞ்சன
மாலையின்
பந்தடி) 65
- 75 : அன்னம்.........அகல
|
|
(பொழிப்புரை) இராசனை அகன்ற பின்னர் அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய வாசவதத்தையால்
பெரிதும் விரும்பப்பட்டவளும் அவள் கண்ணின் மணிபோன்ற தோழியும் ஒள்ளிய
நெற்றியினையுடைய பாவை போல்பவளும் ஆகிய காஞ்சனமாலை என்பவள் களத்திற்சென்று
பந்துகளை எடுத்துக்கொண்டு கையிற்பிடித்த அழகிய பந்தினை அடித்து வானத்தே ஏற்றியும்,
அடித்த பந்தால் முன்பு அடித்துவிட்ட பந்துகளைப் பின்னரும் அடித்து விண்ணிற் செலுத்தியும்
தனது கூந்தலின்மேல் வீழவருமவற்றைத் தனது விரலால் அடித்தும் ஒளியுடைய தனது
மணிமேகலையால் நேர்முகமாக அடித்தும் பந்துகளை மாலையிலே சேர்த்தும் இரு கைக்குள்ளும்
செலுத்தியும் வீழும் பந்துகளின் இடைநின்று அவற்றைத் திருத்தியும் மீண்டும் வானத்தே
போக்கியும் இவ்வாறாக அக்காஞ்சனமாலை தன் மூங்கில்போன்ற பருத்து வளைந்த
கைகளினிடப்பட்ட சங்கு வளையல்கள் ஆரவாரிக்கும்படி ஆயிரத்தைந்நூறு கை அடித்துக்
களத்தினின்றும் சென்ற பின்னர் ; என்க.
|
|
(விளக்கம்) அவந்திகை : வாசவதத்தை. உவந்தவள் -
விரும்பப்பட்டவள். பாவையாகிய காஞ்சன மாலை என்க. விடுத்தவை - முன்பு
அடித்துவிடப்பட்டவை. கண்ணி - தலைமாலை. வெள்வளை - சங்கு
வளையல்.
|