பக்கம் எண் :

பக்கம் எண்:754

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           செயிர்தீர் பதுமைதன் செவிலித் தாய்மகள்
           அயிரா பதியெனு மம்பணைத் தோளி
           மானேர் நோக்கிற் கூனி மற்றவள்
           தானேர் வாங்கித் தனித்தனி போக்கி
     80    நாற்றிசைப் பக்கமு நான்கு கோணமும்
           காற்றினுங் கடிதாக் கலந்தன ளாகி
           அடித்தகைத் தட்டியுங் குதித்துமுன் புரியா
           அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும்
           தோண்மேற் பாய்ச்சியு மேன்மேற் சுழன்றும்
 
                (அயிராபதியின் பந்தடி)
               76 - 84 : செயிர்.........சுழன்றும்
 
(பொழிப்புரை) இனி, குற்றந்தீர்ந்த பதுமாபதியினுடைய செவிலித் தாயின் மகளாகிய அயிராபதி என்னும் அழகிய மூங்கில் போன்ற தோளையுடையவளும் மான்போன்ற பார்வையினையுடையவளுமாகிய கூன்மகள் அக்காஞ்சனமாலையின் முன்னே சென்று அப்பந்துகளைத் தானே நேராக வாங்கித் தனித் தனியாக நான்கு திசைகளிலும் நான்கு மூலைகளிலும் காற்றினும் விரைவாகச் சுழன்று திரிவாளாய் அடித்த கையாலே தட்டியும் முன்பக்கத்தே குதித்தும் விரும்பி உள்ளங்கையால் தாக்கியும் புறங்கையால் செலுத்தியும் தன் தோள் மேல் செலுத்தியும் மேலே மேலே சுழன்றடித்தும்; என்க.
 
(விளக்கம்) செயிர் - குற்றம். பதுமை : பதுமாபதி. அயிராபதி : பதுமாபதியின் தோழி. நான்கு கோணமும் - தென் கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வட கிழக்கு ஆகிய நான்கு மூலைகளும், புரியா - விரும்பி. அகங்கை - உள்ளங்கை. இஃது அங்கை எனவும் வரும்.