பக்கம் எண் :

பக்கம் எண்:756

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           பேசிய முறைமையி னேசா நல்லெழில்
           வாசவ தத்தைக்கு வலத்தோ ளனைய
           அச்சமில் காரிகை விச்சுவ லேகையென்
     95    றுற்ற நாமப் பொற்றொடிக் குறளி
           யானிவ ணிற்பக் கூனியைப் புகழ்தல்
           ஏலா தென்றவள் சேலந் திருத்திக்
           கருவிக் கோனனி கைப்பற் றினளாய்
           முரியுங் காலைத் தெரிய மற்றதிற்
     100    றட்டின ளொன்றொன் றுற்றன ளெழுப்பிப்
           பத்தியிற் குதித்துப் பறப்பன ளாகியும்
           வாங்குபு கொண்டு வானவிற் போல
           நீங்கிப் புருவ நெரிவுட னெற்றியும்
 
             (விச்சுவலேகையின் பந்தடி)
            92 - 103 : பேசிய..........எற்றியும்
 
(பொழிப்புரை) முன்பு கூறப்பட்ட முறைப்படியே பழிப்பில்லாத சிறந்த அழகினையுடைய வாசவதத்தைக்கு வலத்தோள் போன்றவளும் அச்சமில்லாதவளும் அழகுடையவளும் விச்சுவலேகை என்றிடப்பட்ட பெயரையுடையவளும் பொன்வளையலணிந்தவளும் ஆகிய ஒரு குறளி களத்தில் தோன்றிப் பந்தாடுதலிலே மிகவும் வல்லவளாகிய யான் இக்களத்தில் நிற்கும் பொழுதே இரண்டாயிரங் கையடித்த இக் கூனியைப் புகழ்தல் பொருந்தாது! என்று கூறித் தனது ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு, பந்தடிக்குங் கோலைக் கையுள் நன்கு பற்றியவளாய் அப்பந்தடிகோல் வளையும் இடத்தை அறியும் பொருட்டு அதன்கண் தட்டிப் பந்தினை நெருங்கி அக்கோலால் அவற்றை ஒன்றொன்றாக எழுப்பி வரிசையாக அடியிட்டுக் குதித்துப் பறப்பாள் போல அப்பந்துகளைக் கையில் பற்றிக்கொண்டு அப்பந்துகள் இந்திர வில்போல வானத்திலே தோன்றும்படி தன் புருவங்கள் தம்மிடத்தினின்றும் நெற்றியிலேறி வளையாநிற்ப அடித்தும்; என்க.
 
(விளக்கம்) ஏசா - பழிக்கப்படாத. அச்சம் - ஈண்டுக் களத்தில் நின்று ஆடும்பொழுது உண்டாகும் அச்சம். காரிகை - அழகு. நாமம் - பெயர். குறளி - குறுகிய உருவமுடையவள். யான் என்றது பந்தாடுதலில் வல்லவளாகிய யான் என்பதுபட நின்றது. கூனி என்றது வல்லவளல்லளாகிய கூனியை என்பதுபட நின்றது. ஏலாது - பொருந்தாது. சேலம் - சேலை; ஆடை. கருவிக்கோல் - பந்தடிக்குங் கோல். முரியுங்காலை - வளையுமிடத்தை. முரிதல் - வளைதல். கால் - இடம். ஒன்றொன்றாக எழுப்பி என்க. பத்தி - வரிசை. பல்வேறு நிறமுடைய பந்துகளை எழுப்பி அவை வானிற் செல்லுங்கால் இந்திரவிற்போலத் தோன்றும்படி செய்தனள் என்பது கருத்து.