பக்கம் எண் :

பக்கம் எண்:758

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           சீரியல் பதுமைதன் சிந்தைக் கொப்பெனும்
     115    காரிகை மயிலன வாரியை புகுதா
           நுணங்குகொடி மருங்கு நோவ வசைஇ
           மணங்கமழ் கூந்தல் வகைபெற முடித்தும்
           சூடக மேற்றியும் பாடகந் திருத்தியும்
           நாடக மகளிரி னன்கன முலாவியும்
     120    இருகையு மடிப்ப விசும்பொடு நிலத்திடை
           திரிபுவீழ் புட்போ லொருவயி னில்லா
           தெழுந்துவீழ் பந்தோ டெழுந்துசெல் வனள்போற்
 
                 (ஆரியையின் பந்தடி)
                 114 - 122 : சீர்..........போல்
 
(பொழிப்புரை) பெரும்புகழையுடைய பதுமாபதிக்கு இவள் நெஞ்சம் போன்றவள் என்று கூறப்படும் தோழியும் கார்காலத்தில் களிப்புற்று ஆடும் தோகைமயில் போன்றவளுமாகிய ஆரியை என்பாள் களத்திற் புகுந்து நுணுகிய கொடிபோலும் தனது இடை நோகும்படி நடந்து நறுமணங்கமழும் தனது கூந்தலை வகுத்து முடித்தும் சூடகமென்னும் கையணியை ஏறச் செறித்தும் பாடகமென்னும் காலணியைச் சீர்திருத்தியிட்டும் கூத்தியல் மகளிர்போல நன்கு உலாவியும் தன் இரு கைகளும் பந்துகளை மாறி மாறி அடியாநிற்ப வானினும் நிலத்தினும் ஏறியும் இறங்கியும் வீழாநின்ற பறவைபோல ஓரிடத்தே நில்லாது வானிலெழுந்து வீழ்கின்ற பந்தோடு பறந்து செல்வாள் போல; என்க.
 
(விளக்கம்) சீர் - பெரும்புகழ். பதுமை : பதுமாபதி. சிந்தை மனம். காரியை மயில் - கார்காலம் பொருந்தப் பெற்றுக் களிப்புற்ற மயில். நாடக மகளிர் - கூத்தாடு மகளிர்.