பக்கம் எண் :

பக்கம் எண்:759

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
            கருதரு முரிவொடு புருவமுங் கண்ணும்
            வரிவளைக் கையு மனமு மோட
     125    அரியார் மேகலை யார்ப்பொடு துளங்கவும்
            வருமுலை துளும்பவுங் கூந்த லவிழவும்
            அரிமலர்க் கோதையொ டணிகலஞ் சிதறவும்
            இருந்தன ணின்றன ளென்பதை யறியார்
            பரந்த பஃறோள் வடிவின ளாகித்
     130    திரிந்தன ளடித்துத் திறத்துளி மறித்தும்
            முரியுந் தொழிலொடு மூவாயி ரங்கை
            முறையி னேற்றிப் பந்துநிலத் திடலும்
 
                    (இதுவுமது)
             123 - 132 : கருதரும்...........இடலும்
 
(பொழிப்புரை) நினைத்தற்கரிய நெளிவுகளுடனே புருவமும் கண்களும் வரிவரியான வளையலையணிந்த கைகளும் நெஞ்சமும் ஓடாநிற்பவும் அழகமைந்த மேகலையணி ஆரவாரத்தோடு அசையாநிற்பவும் இளமுலைகள் துளும்பா நிற்பவும் கூந்தல் அவிழாநிற்பவும் அழகிய மலர்மாலையோடே அணிகலன்கள் சிதறாநிற்பவும் காண்போர் இவள் இருந்தனளோ? நின்றனளோ? என்று அறியாராகும்படி பரவிய பற்பல கைகளை உடைய உருவம் படைத்தவள் போன்று காணப்பட்டு விரைந்து சுழன்று அடித்தும் திறலுண்டாகத் தடுத்தும் வளையும் தொழிலோடே முறைமையாக மூவாயிரங் கையாக அடித்துயர்த்திப் பந்தினை நிலத்திலே இடுதலும் ; என்க.
 
(விளக்கம்) முரிவு - நெளிவு. அரி - அழகு. வருமுலை : வினைத்தொகை. விரைந்து சுழன்றடித்தலின் காண்போர்க்கு நான்கு திசையினும் பரவிய பற்பல கைகளுடையாள் போன்று தோன்றினள் என்பது கருத்து.