பக்கம் எண் :

பக்கம் எண்:76

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
           குறுஞ்சினைப் புன்னை நறுந்தா தாடிக்
     10     கருங்குயிற் சேவ றன்னிறங் கரந்தெனக்
           குன்றிச் செங்க ணின்றுணைப் பேடை
           உணர்தல் செல்லா தகறொறும் விரும்பிப்
           புணர்த லுணர்வொடு பொங்குசிறை யுளரி
           அளிக்குர லழைஇத் தெளித்துமன நெகிழ்க்குமக்
     15     குயிற்புணர் மகிழ்ச்சி யயிற்கூட் டமைத்த
           செஞ்சுடர் வேலி னெஞ்சிடம் போழத்
           தன்ஞாழ் நவிற்றிய தாமரை யங்கைப்
           பொன்ஞாண் டுயல்வரும் பொங்கிள வனமுலை
           மனைப்பெருங் கிழத்தியை நினைத்தன னாகிச்
 
           (உதயணண் நிலை)
     8 - 19 : அவ்வழி,,.,,.,,,,,.நினைத்தனனாகி
 
(பொழிப்புரை) அவ்விடத்தே குறிய கிளைகளையுடைய
  புன்னையினது நறிய பூந்துகளிலே பயின்று கரிய குயிற்சேவல் தனக்கு
  இயல்பான நிறம் மறைபட்டமையாலே குன்றிமணிபோன்று சிவந்த
  கண்களையுடைய இனிய காதற்றுணையாகிய பெடைக் குயில் தன்னைக்
  காதலன் என்றுணராமல் விலகி விலகிச் செல் லுந்தோறும் அச்சேவல்
  புணர்ச்சி வேட்கையோடே பெரிதும் அப்பெடையைப் பெரிதும் விரும்பித்
  தன்னிறம்  தோன்றும் பொருட்டுத் தனது மிக்க சிறகுகளை அசைத்
  துதறித் தனது அன்பைப் புலப்படுத்தும் இனிய குரலாலே அழைத்தழைத்து
  அதன் ஐயத்தை அகற்றித்தேற்றி அப்பெடையின் மனத்தை நெகிழ்த்து
  அதனோடு புணராநிற்ப, அக்குயில்களின் புணர்ச்சிக் களிப்பு எஃகின்
  கூட்டமைந்த சிவந்த ஒளியையுடைய வேல்போன்று தனது நெஞ்சத்தை
  ஊடுருவிப் பிளத்தலாலே உதயணகுமரன் தன்னுடைய கோடவதி என்னும்
  யாழைப் பயின்ற செந்தாமரை மலர்போன்ற அழகிய கைகளையும்
  பொற்கொடி அசைந்தாடும் பருத்த இளமையுடைய அழகிய
  முலைகளையும் உடைய தன் மனையாளாகிய வாசவதத்தையை நினைத்து
  நினைத்து வருந்துவானாகி என்க.
 
(விளக்கம்) ஓரு குயிற் சேவல் பூந்துகளிற்
  பயின்றமையாலே தன்னிறம் மறைந்து பொன்னிறமுடையதாக,
  அதன் பெடை அதனை ஐயுற்று அஃது அணுகுந்தோறும் விலகிச்
  சென்றதாக. அச்சேவல் தன் சிறகை யுளரி அப்பூந்துகளை யுதிர்த்துப்
  தன்னிறங்காட்டித் தன்குரல் காட்டி அப்பெடையின் ஐயந்தீர்த்துத்
  புணர்ந்தது. அக்குயில்களின் புணர்ச்சியை உதயணன் கண்டமையாலே  
  அவன் வாசவதத்தையை நினைந்து வருந்துவானாயினன் என்பது கருத்து.
  தன்னிறம் - தனக்கியல்பான கருநிறம் என்க, குன்றிமணி போலும் சிவந்த
  கண்ணையுடைய பெடைக்குயில், இன்றுணைப்  பெடைக்குயில் என்று 
  தனித்தனி கூட்டுக. ஊர்தல் செல்லாது - ஒரு சொல்; உணராமல்.
  சிறை - சிறகு. அளிக்குரல் - அன்பைப் புலப்படுத்தும் குரல்.
  அயில் - எஃகு. வேலின் - வேல்போன்று. ஞாழ் - யாழ். போலி.
  பொன்ஞாண் - பொற்கொடி மனைப்பெருங்கிழத்தி.
  மனையாட்டி - வாசவதத்தை.