பக்கம் எண் :

பக்கம் எண்:761

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
            கடையோர் போலக் காமத்திற் கழுமா
            திடையோ ரியல்பின தாகி யில்ல
            துடையோர்க் குரிய வுதவி நாடி
     140    ஆனாச் சிறப்பின் யாவர்க் காயினும்
            தானப் பெரும்பயந் தப்புத லின்றி
            ஓசை யோடிய வுலவாச் செல்வத்துக்
            கோசல வளநாட்டுக் கோமாற் பிழையாத்
 
                (கோசல நாட்டின் பெருமை)
              137 - 143 : கடையோர்.........கோமான்
 
(பொழிப்புரை) கடையாய மாந்தர் போன்று அவாவினாலே உழலாததும், தம் சுற்றத்தார்க்குத் தம்பால் அமைந்த வளத்தைப் பகிர்ந்தளிக்கும் இடையாய மாந்தர் போன்று தன்கட் டோன்றும் செல்வத்தைத் தன்பால் வாழும் மக்கட்குப் பகிர்ந்தளிப்பதும், தன்னை நாடிவருபவர் யாவரேயாயினும் அமையாத சிறப்போடு தானமும் வழங்கும் பேரறத்தின்கண் பிறழ்தலின்றி உலகெல்லாம் தன்புகழ் பரவப்பட்ட கெடாத செல்வத்தினையுடைய கோசலம் என்னும் வளநாட்டு மன்னனுடைய; என்க.
 
(விளக்கம்) கடையோர் - கீழ்மக்கள். இடையோர் - இடையாய மாந்தர். இடையோரியல்பு என்றது தம் சுற்றத்தாரைப் பேணுதலை. எனவே கோசலநாடு தன்கண் தோன்றிய உயிரினங்களை நன்கு பேணும் இயல்புடையது என்றாராயிற்று. இல்லதுடையோர் - வறுமையுடையோர். எனவே தலையாய மாந்தர்போல வறியோரை நாடி அவர்க்குரிய உதவியைச் செய்யும் நாடு என்க. தானப் பெரும்பயன் - தானமாகிய பேரறம். பயம் - ஈண்டு அறம். என்னை ? ''அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனு மது'' என்பவாகலின். ஓசை - புகழ். உலவா - கெடாத.