பக்கம் எண் :

பக்கம் எண்:762

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           கோசல வளநாட்டுக் கோமாற் பிழையாத்
           தேவியர்க் கெல்லாந் தேவி யாகிய
     145    திருத்தகு கற்பிற் றீங்குயிற் கிளவி
           வரிக்குழற் கூந்தல் வசுந்தரி தன்மகள்
           மானே யன்ன மயிலே மால்வரைத்
           தேனே பவளந் தெண்கட னித்திலம்
           கயலே காந்தள் புயலே பொருவிற்
     150    பையே பொற்றுடி படைநவில் யானைக்
           கையே குரும்பை கதிர்மதி வேயே
 
          (கோசலத்தரசன் மகள் வண்ணனை)
             143 - 151 : பிழையா..........வேயே
 
(பொழிப்புரை) சொல் திறம்பாதவளும் தேவிமார்க்கெல்லாம் தலைவியாகிய கோப்பெருந்தேவியும் அழகால் திருமகளை ஒத்தவளும் கற்புடையவளும் இனிய குயிலின் குரல்போன்ற இனிய மொழியையுடையவளும் அறலையும் சுருளையும் உடைய கூந்தலையுடையவளும் ஆகிய வசுந்தரியின் மகளும் மான் அன்னம் மயில் பெரிய மலைத்தேன் பவளம் தெளிந்த கடலிற் றோன்றும் முத்து கயல்மீன் காந்தள்முகை முகில் போர் செய்யும் வில் பாம்பின் படம் பொன்னாலியன்ற உடுக்கை படையிற் பயின்ற யானைக் கை குரும்பை ஒளியுடைய திங்கள் மண்டிலம் மூங்கில் என்னும் இப் பொருள்கள் ; என்க.
 
(விளக்கம்) கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்பதுபற்றிக் கோமாற் பிழையாத் தேவியர் என்றார். தேவியர்க்கெல்லாம் தேவி கோப்பெருந்தேவி. திரு - திருமகள். வரி - அறல். குழற்கூந்தல் - குழலுதலையுடைய கூந்தல் என்க. வசுந்தரி - அத்தேவியின் பெயர். ஈண்டுக் கூறப்பட்ட மானே............வேயே என்னும் பொருள்கள் அக்கோசலத்தரசன் மகள் உறுப்புகட்கு நிரலே உவமையாகக் கூறப்பட்டன. அவை மேலே கூறப்படும். நித்திலம் - முத்து. கயல் - ஒருவகை மீன். காந்தள் : அதன் மலர்க்கு ஆகுபெயர். புயல் - முகில். பை - பாம்பின் படம். துடி - உடுக்கை. குரும்பை - தெங்கிளங்காய். பனையின் குரும்பையுமாம். மதி - முழுமதி என்பது தோன்றக் கதிர்மதி என்றார். வேய் - மூங்கில்.