பக்கம் எண் :

பக்கம் எண்:765

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           பூங்குழை தோற்றது பொறாஅ நிலைமையள்
           எழுந்தன டேவியைப் பணிந்தனள் புகுந்து
     170    மடந்தைய ராடலை யிகழ்ந்தன ணகையா
           வந்தரி வையரெதிர் வரசதி வகையாற்
           பந்தா டிலக்கண நின்றுபல பேசி
           இளம்பிறைக் கோடெனக் குறங்கிரு பக்கமும்
           விளங்கியேர் பிறழ வேற்கணி யிருந்து
     175    முரண்டெழு வனப்பின் மூவே ழாகிய
           திரண்டவொண் பந்து தெரிவன ளாகி
           ஓங்கிய வாடலி னொன்றிது வாகலிற்
           றான்சம நின்று பாங்குறப் பகுந்து
           மண்டல மாக்கி வட்டணை முகத்தே
 
               (மானனீகை பந்தடித்தல்)
            168 - 179 : பூங்குழை.........ஆக்கி
 
(பொழிப்புரை) அழகிய குழையணிந்த வாசவதத்தை அவ்வாட்டத்தின்கண் தோல்வியுற்றதனைப் பொறுக்கமாட்டாத நெஞ்சினையுடையளாய் எழுந்து அக் கோப்பெருந்தேவியைப் பணிந்து களத்திலே சென்று அதுகாறும் ஆடிய அம் மகளிரின் ஆட்டத்தை இகழ்ந்து நகைத்து அத் தோழிமாரெதிரே வந்து நின்று சதி வகையினால் பந்தாடுகின்ற இலக்கணம் பலவற்றைப் பேசி வேல்போலும் அழகிய கண்ணையுடைய அம்மானனீகை அக் களத்தின்கண்ணே இளம்பிறையினது கோடுகள்போலத் தன் தொடை இரண்டு பக்கங்களிலும் விளங்கி அழகு மிளிரும்படி இருந்து ஒன்றற்கொன்று முரண்பட்டுத் தோன்றாநின்ற அழகினையுடைய திரண்ட ஒள்ளிய இருபத்தொரு பந்துகளை ஆராய்ந்து எடுத்து உயர்ந்த பந்தாடல் முறைகளுள் இம்முறை ஒன்றாதலால் தான் நடுநின்று அப் பந்துகளைப் பகிர்ந்து தன்னைச்சூழ வட்டமாக வைத்து; என்க.
 
(விளக்கம்) பூங்குழை : வாசவதத்தை. தேவி : வாசவதத்தை. மடந்தையர் - முன்னர் ஆடிய மகளிர். நகையா - நகைத்து. வரசதி (?) சதி - தாள ஒற்று. வாசந்திவகை என்றும் பாடம். முரண்டு - முரண் : மாறுபாடு. பந்தாடல் முறைகளுள் இஃது ஒன்றாதலால் என்க. சமம் - நடு. பாங்குற - அழகுற. பகுந்து - வகுத்து. மண்டலம் - வட்டம்.