பக்கம் எண் :

பக்கம் எண்:767

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           ..................................................................
           ஆடன் மகளி ரவிநயம் வியப்பவும்
           பேசிய விலயம் பிழையா மரபிற்
     190    பாடன் மகளிர் பாணி யளப்பவும்
           மருவிய கதியிற் கருவிக் கூற்றோர்
           இருபதம் பெயர்க்கு மியல்கொண் டாடவும்
           சிந்தை பெயராத் திறத்திற மவையவை
           பந்தாட் டியலோர் தந்தமி லுவப்பவும்
     195    ஓதிய முறைமையின் யாதுங் காணார்
           தேவிய ரிருவருந் திகைத்தன ரிருப்பவும்
 
                    (இதுவுமது)
            188 - 196 : ஆடல்.........இருப்பவும்
 
(பொழிப்புரை) அத் தோழிமாருள் வைத்துக் கூத்தாடும் மகளிர் அம் மானனீகையின் அபிநயங்களைக் கண்டு வியவாநிற்பவும் பாடும் மகளிர்கள் நூல்களிற் கூறப்பட்ட தாளத்தினைத் தவறா முறைமையினாலே கையால் அளவாநிற்பவும், பொருந்திய அவளுடைய இயக்கத்தின்கண் இரண்டு அடிகளையும் பெயர்க்கின்ற அழகினை இசைக்கருவிக் குழுவினர் கொண்டாடாநிற்பவும் தமது நெஞ்சத்தினின்றும் அகலாத பல்வேறு வகைப்பட்ட செயல்திறங்களைக் கண்டு அவற்றைப் பந்தாடும் ஏனைமகளிர் தங்களுக்குள் பாராட்டி மகிழாநிற்பவும் ஈண்டுக் கூறிய முறைமையில் யாதொன்றனையும் நன்கு காணமாட்டாராய்க் கோப்பெருந்தேவியர் இருவரும் திகைத்திரா நிற்பவும்; என்க.
 
(விளக்கம்) ஆடல் மகளிர் - கூத்தாடும் மகளிர். இலயம் - தாளம். பாணி - கை. கருவிக் கூற்றோர் - இசைக் கருவிக் குழுவினர். இருவரும் -  வாசவதத்தையும் பதுமாபதியும்.