பக்கம் எண் :

பக்கம் எண்:768

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
            காந்தண் முகிழ்நனி கவற்றுமெல் விரலின்
            ஏந்தின ளெடுத்திட் டெறிவுழி முன்கையிற்
            பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினு மோங்கிச்
     200    சூறை வளியிடைச் சுழலிலை போல
            மாறுமா றெழுந்து மறிய மறுகி
            ஏறுப விழிபவா காய நிற்பன
            வேறுபடு வனப்பின் மும்மைய வானவை
            ஏர்ப்பொலி வளைக்கை யிரண்டே யாயினும்
     205    தேர்க்கா லாழியிற் சுழன்றவை தொழில்கொள
 
                    (இதுவுமது)
            197 - 205 : காந்தள்.........கொள
 
(பொழிப்புரை) காந்தள் அரும்பினை மிகவும் தோற்பிக்கும் தனது மெல்லிய விரலால் பந்தினை ஏந்தி எடுத்து எறியுங்கால் தன் முன் கையினின்றும் பாய்ந்த அப் பந்துகள் நிலத்திலும் விசும்பினுமாக உயர்ந்து சூறைக் காற்றினிடையே சுழலாநின்ற இலைகள்போல மாறுமாறாக எழுந்து வீழவும் சுழன்று வானின்கண் ஏறுவனவும் இறங்குவனவும் நிற்பனவுமாய் ஒன்றனோடு ஒன்று மாறுபட்ட அழகையும் முக்கூறுபட்ட நிறத்தையுமுடைய அப் பந்துகளை அவளது அழகு பொலிகின்ற வளையலணிந்த கைகள் இரண்டேயாகவும் அவை தேர்ச் சக்கரம்போன்று சுழன்று சுழன்று தொழில் செய்யாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) எறிவுழி - எறியுங்கால். சூறைவளி - சுழல்காற்று. வானின்கண் எறியப்பட்ட பந்துகள் நிலத்தில் வீழா வண்ணம் தடுத்து வானத்தே மீண்டும் ஏற்றிவிடுதலின் ஆகாயம் நிற்பன என்றார். மும்மைய - ஏழு ஏழாய் மூன்று கூறுபட்டவை எனினுமாம். ஏர் - அழகு. காலாழி : இருபெயரொட்டு.