பக்கம் எண் :

பக்கம் எண்:769

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           ஓடா நடவா வொசியா வொல்காப்
           பாடாப் பாணியி னீடுயிர்ப் பினளாய்க்
           கண்ணின் செயலினுங் கையின் றொழிலினும்
           விண்ணவர் காணினும் வீழ்வர்கொல் வியந்தெனப்
     210    பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும்
           ஆடுபந் தொலியுங் கேட்பி னல்லதை
           ஐயபந் தெழவெழ வதனுட னெழுதலிற்
           கையுங் காலு மெய்யுங் காணார்
 
                  (இதுவுமது)
            206 - 213 : ஒடா...........காணார்
 
(பொழிப்புரை) ஓடியும் நடந்தும் ஒசிந்தும் ஒல்கியும் பாடியும் தாளத்திற்கேற்ப விடும் உயிர்ப்பினளாய்க் கண்ணின் செயலாலும் கையின் செயலாலும் இப்பொழுது இவளைத் தேவர்கள் காணினும் வியந்து பெரிதும் விரும்புவர் என்று கண்டோர் வியக்கவும் பாடகத்தின் ஒலியும் சூடகத்தின் ஒலியும் ஆடா நின்ற பந்தின் ஒலியும் ஆங்குள்ளோர் செவியால் கேட்பதல்லது அழகிய அப்பந்துகள் எழுந்தோறும் தானும் எழுதலாலே அவளுடைய கைகளையும் கால்களையும் உடம்பினையும் காணமாட்டாராய் ; என்க.
 
(விளக்கம்) வீழ்வர் - விரும்புவர். பாடகம் - காலணி. சூடகம் -  கையணி. ஐய - அழகிய. மெய் - உடம்பு.