பக்கம் எண் :

பக்கம் எண்:772

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           இடையிடை யிருகா றெரிதர மடித்தும்
            அரவணி யல்குற் றுகினெறி திருத்தியும்
            நித்திலக் குறுவியர் பத்தியிற் றுடைத்தும்
            பற்றிய கந்துகஞ் சுற்றுமுறை யுரைத்தும்
     235    தொடையுங் கண்ணியு முறைமுறை யியற்றியும்
            அடிமுதன் முடிவரை யிழைபல திருத்தியும்
            படிந்தவண் டெழுப்பியுங் கிடந்தபந் தெண்ணியும்
            தேமலர்த் தொடைய றிறத்திறம் பிணைத்தும்
            பந்துவர னோக்கியும் பாணிவர நொடித்தும்
     240    சிம்புளித் தடித்துங் கம்பிதம் பாடியும்
 
                  (இதுவுமது)
           231 - 240 : இடை........பாடியும்
 
(பொழிப்புரை) இடையிடையே யாவர்க்கும் தெரியும்படி இரு கால்களையும் மடித்தும் அரவின் படம் போன்ற அழகிய அல்குலின்கண் ஆடையை முறையாகத் திருத்தியும், முத்துப் போன்ற சிறிய வியர்வைத் துளிகளை நிரலாகத் துடைத்தும் கையிற்பற்றிய பந்தினைச் சுற்றுகின்ற முறைகளை அவையோர்க்குக் கூறியும் தான் அணிந்துள்ள தொடையும் கண்ணியுமாகிய மாலைகளைப் பன்முறையும் திருத்தியும் அடிமுதலாக முடியீறாக உள்ள அணிகலன் பலவற்றையும் திருத்தியும் தன்மேற் படிந்த வண்டுகளை எழுப்பியும் கிடந்த பந்துகளை எண்ணியும் தேன் துளும்பும் மலர்மாலைகளைத் திறம்படத் தொடுத்தும் பந்தின் வரவினை நோக்கியும் தாளம் உண்டாகக் கைகளை நொடித்தும் கண் சுருக்கிப் பந்துகளை அடித்தும் கம்பிதமான இசைகளைப் பாடியும் ; என்க.
 
(விளக்கம்) மானனீகை பந்தடிக்கும்பொழுது இடையிடையே கால் மடித்தல் முதலிய தொழில் பலவற்றையும் செய்துகொண்டிருந்தாள், என்பது கருத்து. பாணிவர - தாளமுண்டாக. சிம்புளித்தல் - கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். கம்பிதம் - அசைவுள்ள பாட்டு.