பக்கம் எண் :

பக்கம் எண்:773

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது முற்றிற்று.
 
         ஆழியென வுருட்டியுந் தோழியொடு பேசியும்
         சாரிபல வோட்டியும் வாழியென வாழ்த்தியும்
         அந்தளிர்க் கண்ணி யவந்திகை வெல்கெனப்
         பைந்தொடி மாதர் பற்பல வகையால்
  245    எண்ணா யிரங்கை யேற்றின ளேற்றலும்
 
                    (இதுவுமது)
             241 - 245 : ஆழி............ஏற்றலும்
 
(பொழிப்புரை) பந்துகளைச் சக்கரம் போன்று சுழல வீசியும் இடையிடையே தோழிமாரோடு பேசியும் பற்பல கதியில் பந்துகளைச் செலுத்தியும் அழகிய தளிர்மாலையணிந்த அவந்திகையாகிய எம்பெருமாட்டி வெல்க ! என்றும் ''வாழ்க!'' என வாழ்த்தியும் பசிய தொடியணிந்த அம்மானனீகை இவ்வாறு பற்பல முறைகளாலே இடையறவின்றி எண்ணாயிரங் கையாக ஏற்றினள். அங்ஙனம் ஏற்றியபொழுது ; என்க.
 
(விளக்கம்) ஆழி - சக்கரம். சாரி - கதி. எம்பெருமாட்டி வாழி என வாழ்த்தியும் என்க. அவந்திகை : வாசவதத்தை. மாதர் : மானனீகை. எண்ணாயிரங் கை - எண்ணாயிர முறை.