பக்கம் எண் :

பக்கம் எண்:775

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது முற்றிற்று.
 
             நின்ற வளவிற் சென்றவண் முகத்தே
   250       ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை
             ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்
             களித்தவு மன்றி விளித்தவும் போலும்
             வேலென விலங்குஞ் சேலென மிளிரும்
             மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்
   255       குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும்
             மலருங் குவியுங் கடைசெல வளரும்
             சுழலு நிற்குஞ் சொல்வன போலும்
 
           (உதயணன் மானனீகையைக் கண்டு காதலித்தல்)
                249 - 257 : சென்று..........போலும்
 
(பொழிப்புரை) பந்தாடு களத்தின்கண் இடையறாது எண்ணாயிரங்கை பந்தடித்துச் சென்ற அம்மானனீகையின் மதிமுகத்தே பொருந்திய தன்மையோடே அவளுடைய கண்கள் தம்முள் ஒன்றை ஒன்று காணாமல் ஓடி மறைவனபோன்றும், தம்முள் களிப்புற்றன போலவும் அதுவேயுமன்றி ஒன்றனை ஒன்று அழைப்பன போலவும் காணப்பட்டு, வேல்போன்று விளங்கா நிற்கும்; சேல் மீனென மிளிராநிற்கும் ; திருமால் போன்று மேனோக்கி வளரா நிற்கும்; காண்போரை வருத்துதலாலே கூற்றுவனையும் ஒக்கும் ; குழைகளை எறியாநிற்கும் ; மீண்டும் மூக்கின்மேற் சென்று தாக்கும் ; நன்கு மலராநிற்கும்; கூம்பாநிற்கும;செவிகாறும் சென்று நீளாநிற்கும் ; சுழலும் ; நிற்கும் ; ஏனையோரொடு பேசுவனபோன்று தோன்றாநிற்கும் ; என்க.
 
(விளக்கம்) அவை - அக்கண்கள். செய்யுளாகலின் சுட்டுச் சொல் முற்பட வந்தது. ஒன்றை ஒன்றை விளித்தவும் என்க. சேல் - ஒருவகை மீன். மால் - திருமால். திருமால் பேருருக்கொண்டு உலகளந்தமைபற்றி மாலென நிமிரும் என்றார். நிமிர்தல் - வளர்தல், "நீர் செல நிமிர்ந்த மாஅல் போல்" என்றார் முல்லைப் பாட்டினும். காலன் - கூற்றுவன். கண்டோர் உயிர் பருகலின் காலன் உவமை. கடுக்கும் : உவமவுருபு. கடை - இடம்; கடைப்பகுதியுமாம்.