பக்கம் எண் :

பக்கம் எண்:777

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது முற்றிற்று.
 
          
   265    பூண்டிகழ் கொங்கைப் புயலேர் கூந்தல்
          மாண்குழை புதுநலங் காண்டகச் சென்ற
          உள்ளந் தன்னை யொருப்படுக் கல்லா
          வெள்ளத் தானை வேந்தன் பெயர்ந்து
          பிடிமிசைத் தோன்றலும் பேதையர் தத்தம்
   270    இடவயிற் பெயர்ந்தன ரெழுந்தனர் விரைந்தென்.
 
                    (இதுவுமது)
           265 - 270 : பூண்........விரைந்தென்
 
(பொழிப்புரை) அணிகலன்கள் விளங்காநின்ற கொங்கைகளையும், முகிலை யொத்த கூந்தலையும் மாட்சிமையுடைய குழையினையும் உடைய அம்மானனீகையின் புத்தம் புதிய அழகினிடத்தே காட்சிதகச் சென்ற தன் நெஞ்சத்தை ஒருவழிப்படுத்தி மீட்கமாட்டாத வெள்ளம் என்னும் பேரெண் அளவினதாகிய பெரிய படையையுடைய அவ்வுதயண மன்னன் மீண்டும் பிடிமிசைச் சென்று திரும்பி உலாப் போய் வருவான் போன்று வந்து அரண்மனை முன்றிலிலே தோன்றுமளவிலே பந்தாடு களத்திலிருந்த கோப்பெருந்தேவியையுள்ளிட்ட மகளிரெல்லாம் தத்தம் இடத்தினின்றும் விரைந்து எழுந்து சென்றனர் என்க.
 
(விளக்கம்) பூண் - அணிகலன். புயல் - முகில். உதயணனுக்கு அவளழகு புத்தம் புதிய காட்சியாகலின் புதுநலம் என்றார். இனி இளநலம் எனினுமாம். ஒருப்படுத்து மீட்கமாட்டாத என்க. வெள்ளம் - ஒரு பேரெண், கடலுமாம். வேந்தன் : உதயணன். பேதையர் - கோப்பெருந்தேவி முதலியோர். தம்முள் மாறுவேடத்திருந்த உதயணனைக் காணமாட்டாமை தோன்றப் பேதைமகளிர் என்றிரங்கிக் கூறியபடியாம்.