உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
வாங்கிப் புகழ்ந்து வாசகந் தெரிவாள்
140 ஏங்கிய நினைவுட னினைந்தழு
துகுத்த
கண்ணீர் கொண்டு மண்ணினை
நோக்கிப்
பெண்ணீர் மைக்கியல் பிழையே
போன்மெனத்
தோயு மையலிற் றுண்ணெ
னெஞ்சமோ டாயிழை
பட்டதற் காற்றா ளாயவள் |
|
(வாசவதத்தை அவ்வோலையைப்
படித்து
வருந்துதல்)
139 - 144 : வாங்கி............ஆற்றாளாய் |
|
(பொழிப்புரை) அவ் வோலையை வாசவதத்தை கையில் வாங்கிப் பதுமாபதியின் அடக்கமுடைமையைப்
புகழ்ந்தவளாய் அவ் வோலையில் அமைந்த பொருளை ஓதியுணர்பவள், தான் செய்த கொடுமையை
நினைந்து ஏங்கிய நினைவோடே வருந்தி வருந்தி அழுது சிந்திய கண்ணீரையுடையளாய் நிலத்தை
நோக்கி "அந்தோ! பெண் தன்மைக்கு இயற்கை பிழை செய்தலே போலும்!" என்று தன்னுட்
கருதித் துன்பத்தில் தோய்ந்து துணுக்கென்னும் நெஞ்சத்தோடு தன்னாலே அக் கோசல
மன்னன் மகள் பட்ட துன்பத்திற்குத் தானே ஆற்றாளாகி ; என்க. |
|
(விளக்கம்) புகழ்ந்து என்றது பதுமாபதி இதன் வாசகம் யான்
உணரேன் என்று கூறிய அடக்கத்தைப் புகழ்ந்து என்றவாறு. பிழை செய்தலே போலும் என்க.
"பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே" என்றார் பிறரும். போன்ம் - போலும். மையலில்
தோயும் நெஞ்சம் என மாறுக. ஆயிழை :
மானனீகை. |