பக்கம் எண் :

பக்கம் எண்:780

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          விரைந்தனர் பெயர வேந்தன் காம
          சரம்பட நொந்து தளர்வுட னவணோர்
          பள்ளி யம்பலத் துள்ளினி திருந்து
          மேவத் தகுமுறைத் தேவியர் வருகென
    5     ஏவற் சிலதியர் தாமவர்க் குரைப்பக்
 
                  (உதயணன் செயல்)
            1 - 5 : விரைந்தனர்............உரைப்ப
 
(பொழிப்புரை) மன்னன் வரவுணர்ந்து வாசவதத்தை முதலியோர் பந்தாடு களத்தினின்றும் விரைந்து அரண்மனைக்குச் சென்ற பின்னர் மானனீகையைக் கண்ட காலத்தே தன் நெஞ்சத்தே காமன் கணைகள் தைத்தமையாலே பெரிதும் வருந்தி யுடல் தளர்ந்து அங்குள்ள வொரு பள்ளியம்பலத்தே இனிதாக வீற்றிருந்து ஈண்டு வரற்குரிய முறைமையோடே எந்தேவியரிருவரும் இங்கு வருவாராக ! என்று பணிமகளிரை விடுத்தலானே அவர் சென்று அச் செய்தியை அரசியரிருவர்க்கும் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) தேவிமார் முதலியோர் பெயர என்க. வேந்தன் : உதயணன். காமசரம் - காமவேள் எய்த மலரம்புகள். அவை : தாமரை, சூதம், அசோகம், முல்லை, நீலம் என்பன. பள்ளியம்பலம் - பள்ளி கொள்ளுதற்குரிய இடம். இதனை அவை என்றும் கூறுப. ஏவற்சிலதியர் - பணி மகளிர். அவர்க்கு : வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும்.