பக்கம் எண் :

பக்கம் எண்:783

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
            கொற்றவ னுரைக்கும் பொற்றொடித் திரளினைப்
           பாரான் பார்த்தொரு பைந்தொடி நின்னொடு
           வாரா தொழிதல் கூறெனக் கூறலும்
 
             (உதயணன் வாசவதத்தையை வினாதல்)
                15 - 17 : கொற்றவன்.........கூறலும்
 
(பொழிப்புரை) பின்னர் இங்ஙனம் தன் வினவிற்கு மறுமொழி கூறாநின்ற பொன் வளையலணிந்த வாசவதத்தையின் தோழியர் கூட்டத்தைப் பார்த்து ஆண்டுத் தன் காதலியாகிய அம் மானனீகையைக் காணமாட்டானாய் அவ் வாசவதத்தையை நோக்கி "நங்காய் ! நின் தோழியருள் வைத்து ஒருத்தி மட்டும் நின்னோடு இங்கே வாரா தொழிந்தமைக்குக் காரணம் என்னை ? கூறுவாயாக !" என்று வினவாநிற்ப என்க.
 
(விளக்கம்) கொற்றவன் : உதயணன். உரைக்குந்திரள், பொற்றொடித்திரள் என்று தனித்தனி கூட்டுக. விடைகூறும் தோழியர் கூட்டம் என்றும் வாசவதத்தையின் தோழியர் கூட்டம் என்றும் பொருள் கூறுக. பொற்றொடி என்றது வாசவதத்தையை. இனி, திரளிற்கே அடையாக்கினுமாம். திரளினைப் பார்த்து அவருள் மானனீகையைப் பாரானாய் என மாறியும் வருவித்தும் கூறுக. பாரான் வாசவதத்தையை நோக்கிக் கூறு எனக் கூறலும் என்க.